தேசத் துரோக வழக்கில் வேல்முருகன் கைது..! நெருக்கும் காவல்துறை

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசிய வழக்கில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

வேல்முருகன்

துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், கடந்த 25-ம் தேதி தூத்துக்குடி சென்றார். அப்போது, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில் அவரை தூத்துக்குடி விமானநிலையத்திலேயே வைத்து காவல்துறையினர் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், சிறுநீரகப் பாதிப்பு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தற்போது, அங்கு சிகிச்சையில்தான் இருந்துவரும்நிலையில், கடலூர் மாவட்ட குறிஞ்சிப்பாடி காவல் ஆய்வாளர் ராமதாஸ், வேல்முருகன்மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசிய வழக்கையும், தேசத் துரோக வழக்கையும் பதிவுசெய்து கைதுசெய்தார். காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான வேல்முருகன் பேசியதன் அடிப்படையில், அவர்மீது மேலும் புதிய வழக்குகள் பதிவுசெய்யப்படும் என்று தகவல்கள் வந்துள்ளன.

முன்னதாக, வேல்முருகனை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, `வேல்முருகனை குண்டாஸ் சட்டத்தில் கைதுசெய்ய காவல்துறையினர் திட்டமிடுவதாக எனக்குத் தகவல் வந்துள்ளது' என்று தெரிவித்திருந்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!