வெளியிடப்பட்ட நேரம்: 22:55 (30/05/2018)

கடைசி தொடர்பு:10:07 (31/05/2018)

ப்ரோ கபடி: கோடிகளுக்கு மேல் உயர்ந்த வீரர்களின் விலை!

ப்ரோ கபடியின் ஆறாவது சீசனுக்கான ஏலத்தில், மோனு கோயத் 1.51 கோடி ரூபாய்க்கும், ராகுல் சௌத்திரி 1.29 கோடி ரூபாய்க்கும் எடுக்கப்பட்டுள்ளனர். 

ப்ரோ கபடி

2018-ம் ஆண்டுக்கான ப்ரோ கபடி லீக் போட்டிகள் அக்டோபர் 19-ம் தேதி தொடங்குகிறது. அந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம், மும்பையில் இன்று நடைபெற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில், நிதின் தோமர் அதிகபட்சமாக ரூ 93 லட்சத்துக்கு ஏலம் போனார். ஆனால், இன்று மதியம் வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் விடும்போதே, ஈரான் நாட்டைச் சேர்ந்த ஃபசலை மும்பை அணி              1 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து, முந்தைய சாதனையை முறியடித்தது. அதன் பின்னர், மாலையில் இந்திய வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது. இந்திய வீரர்களை வாங்க அனைத்து அணிகளும் அதிக ஆர்வம் காட்டினர்.  தீபக் ஹூடாவை 1.15 கோடி ரூபாய்க்கு ஜெய்ப்பூர் அணியும், தர்ஷன் 28 லட்ச ரூபாய்க்கும், அனுபவ வீரர் மஞ்சித் சில்லர் 20 லட்ச ரூபாய்க்கும் தமிழ் தலைவாஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ராகுல் சௌத்ரியை 1.29 கோடி ரூபாய்க்கு தெலுங்கு டைட்டன் அணி ஏலத்தில் எடுத்தது. அதிகபட்சமாக மோனு கோயத்தை 1.51 கோடி ரூபாய்க்கு ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. கடந்த ஆண்டு எந்த வீரரும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போகாத நிலையில், இந்த ஆண்டு பல வீரர்கள் ஒரு கோடிக்கு மேல் ஏலம் போயுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளையும் இரண்டாம் நாள் ஏலம் நடைபெறுகிறது. அப்போது, மேலும் பல வீரர்கள் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.