வெளியிடப்பட்ட நேரம்: 03:45 (31/05/2018)

கடைசி தொடர்பு:08:37 (31/05/2018)

"நீங்களே தீர்ப்பு எழுத வேண்டாம்!" சர்ச்சைக்குள்ளான கேரள முதல்வரின் பேச்சு!

கேரள மாநிலத்தில் நடந்த ஆணவக் கொலை குறித்து தொடர்ந்து செய்தி வெளியிட்டதால் கோபமான முதல்வர் பினராயி விஜயன் 'செய்திகளை மட்டும் கொடுத்தால் போதும், நீங்களே தீர்ப்பு எழுதவேண்டாம்' என ஆவேசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 கேரள மாநிலத்தில் நடந்த ஆணவக் கொலைகுறித்து தொடர்ந்து செய்தி வெளியிட்டதால் கோபமான முதல்வர் பினராயி விஜயன், 'செய்திகளை மட்டும் கொடுத்தால் போதும், நீங்களே தீர்ப்பு எழுத வேண்டாம்' என ஆவேசமாகப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள முதல்வர் பினராயிவிஜயன்

கேரள மாநிலம் கோட்டயத்தில், நீனு என்ற பெண்ணை காதலித்துத் திருமணம்செய்த பட்டியலின இளைஞர் கெவின் ஜோசப் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நீனுவின் தந்தை, சகோதரர்கள் மற்றும் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கெவினை கொலை செய்வதற்காக காரில் கடத்திச்சென்றதுகுறித்து கோட்டயம் காந்தி நகர் காவல் நிலையத்தில் நீனுவின் பெற்றோர் மற்றும் கெவினின் மனைவி நீது ஆகியோர் புகார் கொடுத்தார். அதற்கு,, கோட்டயத்தில் முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி இருக்கிறது. எனவே, உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாது. முதல்வரின் நிகழ்ச்சி முடிந்த பிறகு நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறிய காந்தி நகர் சப்-இன்ஸ்பெக்டர் சிபு, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். முதல்வரின் பாதுகாப்புதான் முக்கியம், மக்கள் உயிரைப் பாதுகாப்பது முக்கியமில்லை என்ற ரீதியில் கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதுமட்டுமல்லாது, கெவினின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட கடந்த திங்கள்கிழமை, செங்கனூர் தொகுதி இடைத்தேர்தல் நடந்துகொண்டிருந்தது.

பட்டியலின இளைஞர் கெவின் ஜோசப்

இடைத்தேர்தல் செய்தியை விட்டுவிட்டு,  கெவின் கொலை சம்பவத்துக்கு மீடியாக்கள் முக்கியத்துவம் கொடுத்தன. இதையடுத்து, செங்கனூர் தொகுதி முழுவதும் கேபிள் டி.வி சானல் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருப்பதாக மீடியாக்கள் குற்றம் சுமத்தின. தொடர்ந்து மீடியாக்களின் செய்தியால் நொந்துபோன கேரள முதல்வர் பினராயிவிஜயன், "மீடியாக்கள் நாட்டை அவமானப்படுத்த முயற்சிக்கின்றன. செய்திகளை மட்டும் கொடுத்தால் போதும், நீங்களே தீர்ப்பு எழுதவேண்டாம்" என்று நேற்று திருவனந்தபுரத்தில் ஆவேசமாகப் பேசினார். பினராயி விஜயனின் இந்தக் கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கேரள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, "பிரச்னைகளுக்கு வேறு யாரையும் குற்றம் சுமத்த வேண்டாம். தனது இயலாமையை மறைப்பதற்காக மீடியாக்கள்மீது கோபப்படுகிறார். நாட்டை அவமானப்படுத்தவது முதல்வர்தான்; மீடியாக்கள் அல்ல" என்றார்.