கச்சநத்தம் போராட்டத்தில் இயக்குநர் இரஞ்சித்!

கச்சநத்தம் பகுதியில் நடந்த இருவர் படுகொலைக்கு நீதி கேட்டு, மதுரையில் இரண்டாவது நாளாக நடந்துவரும் போராட்டத்தில் திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் கலந்துகொண்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில், பட்டியலினத்தைச் சேர்ந்த இருவர் மாற்றுச் சாதியினரால் கடந்த 28-ம் தேதி கொல்லப்பட்டதற்கும், 6 பேர் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவத்துக்கும்  நியாயம் கேட்டு, மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே பட்டியலின அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகளால் இரண்டாவது நாளாகப் போராட்டம் நடந்துவருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை ஏற்கும் வரை அங்கிருந்து நகர மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருவோர் கூறிவருகிறார்கள்.

கச்சநத்தம் போராட்டத்தில்

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், இயக்குநர் பா.இரஞ்சித் இரவு போராட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம், ``தாழ்த்தப்பட்டோர்  படுகொலை செய்யப்படுவதைத் தடுக்கவும், சாதி ரீதியான வேறுபாடுகளைக் களையவும் ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்ச் சூழலில் இதைச் சரி பண்ணாமல் ஒன்றும் செய்ய முடியாது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சாதி பார்த்து யாரும் போராட வரலை. ஆனால், ஊரில் வாழும்போது மட்டும் சாதி பார்ப்பது ஏன்? சாதி ரீதியாக ஒடுக்கி, கிராம மக்களைச் சொந்த நிலத்தை விட்டு வெளியேற்றுவது ஈழத்தமிழர்கள் பட்ட கொடுமையைவிட அதிகமாக உள்ளது. கிராமங்களில் இருக்கும் சாதி வேறுபாட்டைக் களைய இளைஞர்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் முன் வரணும். முதலில் சாதிப் பாகுபாடு பற்றிய புரிதல் வேண்டும். இது, பொதுப்பிரச்னையாக இருந்திருந்தால் அனைவரும் வந்திருப்பார்கள். ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்திருக்கும். பட்டியலினத்தைச் சேர்ந்தவரின் பிரச்னை என்பதால் பலர் ஒதுங்கி நிற்கிறார்கள்" என்று செய்தியாளர்களிடம் ஆதங்கத்துடன் பேசினார். பிறகு அங்கிருந்து கிளம்பியவர், இன்று காலை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருபவர்களைச் சந்திக்க உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!