வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/05/2018)

கடைசி தொடர்பு:12:39 (31/05/2018)

மறைந்த தன்னம்பிக்கை மாணவி ப்ரீத்தி 471 மதிப்பெண்கள் எடுத்து சாதனை!

ப்ரீத்தி

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துபோன ப்ளஸ்-1 மாணவி ப்ரீத்தி, நேற்று வெளியான ப்ளஸ்-1 தேர்வு முடிவில் 471 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார் என்ற தகவல் அவரது பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் மட்டுமல்லாது ஒரு ஊரையே கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.

கோவை மாவட்டம்  சீரநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த சிட்டிபாபு, புவனேஸ்வரி தம்பதியின் ஒரே மகள் ப்ரீத்தி. பிறப்பிலேயே எலும்பு வளர்ச்சி குறைபாட்டோடு பிறந்ததால் ப்ரீத்தியின் உடல் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்பட்டது. எழுந்து நடக்க முடியாத அவள்  தவழ்ந்த நிலையிலேயேதான் இருந்தாள்.  கூலித் தொழிலாளியான சிட்டிபாபுவும், புவனேஸ்வரியும் ப்ரீத்தியை உடல் ஊனமுற்றவளாகக் கருதி வீட்டில் முடக்கிவிடவில்லை. அவளையும் மற்ற பிள்ளைகளைப் போல பள்ளிக்கு அனுப்பி... படிக்க வைத்து... சாதனைப் படைக்க வைக்க வேண்டும் என்ற சபத்தை நெஞ்சிலேற்றிக்கொண்டார்கள். 6-ம் வகுப்பு வரை சிட்டிபாபுவும், 6-லிருந்து 11 -ம் வகுப்பு வரை புவனேஸ்வரியும் ப்ரீத்தியை பள்ளிக்கு தூக்கிச்சென்றார்கள். ப்ரீத்திக்கு படிப்பு என்றால் உயிர். தன்னுடைய உடல்குறைபாடுகுறித்த தாழ்வு மனப்பான்மைக்கு இடம் தராமல், மனது முழுக்க படிப்பை நிரப்பியிருந்தாள். பத்தாம் வகுப்பில் 468 மதிப்பெண்களைப் பெற்று அதை  ஊருக்கும்  நிரூபித்தாள்.  அவளை எல்லோரும் உச்சி முகர்ந்துகொண்டாடினார்கள்.  

ப்ரீத்தி

படம் வரைய முடியாது என்பதால், பதினொன்றாம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவைத் தேர்வுசெய்ய முடியாத நெருக்கடிக்குள் தள்ளப்பட்டாள்.   ‘அவளது உடல்நிலையையும் அவள் படிப்பின்மீது கொண்டிருக்கும் ஆர்வத்தையும் பார்த்து, அவள் ஒரு ஆளுக்காக ஆர்ட்ஸ் குரூப்பை ஆரம்பித்தது  சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள சா.பூல்சந்த்-வீர்சந்த் அரசு மேல்நிலைப்பள்ளி.  தன் ஒரு ஆளுக்காக  புதிய குரூப் ஆரம்பிக்கும் அளவுக்கு ஆசிரியர்கள் நம்மீது நம்பிக்கையும் அன்பும் வைத்திருக்கிறார்கள் என்ற  மகிழ்ச்சியில் வற்றாத ஆர்வத்தோடு பதினொன்றாம் வகுப்பைப் படித்து முடித்தாள். எழுதிய தேர்வுக்கு முடிவு வரவில்லை. ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் விடுமுறையில் பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தை படிக்க ஆரம்பித்திருந்தாள்...  இந்தச் சூழலில்தான்,  கடந்த 18-ம் தேதி,  திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்துபோனாள்.  ஒட்டுமொத்த ஊரும் அவளுக்காக அழுதது. இன்று பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது.  ப்ரீத்தி  471 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாள். இதைக் கேள்விப்பட்ட  சீரநாயக்கன்பாளையத்து  மக்கள் ஒவ்வொருவரின் கண்களும் கண்ணீர்த்துளிகளைச் சிந்தின.

இதுகுறித்துப் பேசிய சீரநாயக்கன் பாளையம் மக்கள், `` இந்த  சீரநாயக்கன் பாளையத்துக்கே நம்பிக்கைனா என்னன்னு சொல்லிக்கொடுத்தது ப்ரீத்தி குடும்பம்தான். அவங்களைப் போல துயரத்தை யாராலும் அனுபவிச்சிருக்க முடியாது. ஆனால், அதைக் கொஞ்சமும் வெளிக்காட்டிக்க மாட்டாங்க. ப்ரீத்தியின் அம்மா புவனேஸ்வரி.வெளில காட்டினா, குழந்தை வாடிப்போயிரும்னு மனசுக்குள்ளேயே போட்டு புதைச்சுருவாங்க.  அவங்க அப்பாவும் அப்படித்தான். உள்ளுக்குள்ளே அழுதுகிட்டு வெளியே சிரிச்ச முகத்தோட இருப்பாங்க.  ஊரே அவங்களைப் பார்த்து ஆச்சர்யப்படும்.  இங்க உள்ள  ஒவ்வொரு வீட்டுப் பிள்ளைகளுக்கும் ப்ரீத்திதான் ரோல் மாடல். படிச்சு கலெக்டராகி, இந்த ஊருக்குப் பெருமை சேர்ப்பேன்னு சொல்லிட்டு இருப்பா.  அவ சொல்ற விதத்தில் ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை கலந்திருக்கும். ஆனால்,  அந்த நம்பிக்கையை  கடவுள் கலைச்சுட்டான். ரிசல்ட் வர்றதுக்கு முன்னாடியே அவளை கூட்டிகிட்டான் கல்நெஞ்சக்காரன்.  இப்போ ரிசல்ட் வந்திருக்கு;  471 மார்க் வாங்கியிருக்கா . இதைப் பார்த்துட்டு போயிருந்தான்னா கொஞ்சம் ஆறுதலா இருந்திருக்கும்  என்று சொல்லும் சீரநாக்கன்பாளையத்து மக்கள் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டுச் சொல்கிறார்கள்,  ப்ரீத்தி இறக்கவில்லை... எங்கள் குழந்தைகளுக்கு என்றைக்கும் நம்பிக்கைப் பாடமாக இருப்பாள் என்று.

ப்ரீத்தியின் ஆத்மா சாந்தியடையட்டும்.