``போராடிய பொதுமக்களை தீவிரவாதிகளாகச் சித்திரிக்கக் கூடாது'' - கே.பாலகிருஷ்ணன்

``போராடிய பொதுமக்களை தீவிரவாதிகளாகச் சித்திரிக்கக் கூடாது'' - கே.பாலகிருஷ்ணன்

13 உயிர்களைக் காவு வாங்கிவிட்டு, 'ஸ்டெர்லைட் ஆலை' தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டுள்ளது! இப்போதும்கூட ஆலையை மூடுவதற்காக தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணையை நம்பமுடியாமல் இருக்கின்றனர் மக்கள். காரணம்... ஆலை நிர்வாகம் நீதிமன்றங்களின் வாயிலாக மீண்டும் ஆலையை செயல்பட வைக்கும் முயற்சியில் இறங்கி வெற்றி பெற்றுவிடுமோ... என்ற சந்தேகம்தான். 

ஸ்டெர்லைட்

``ஸ்டெர்லைட் ஆலை மூடல் அரசாணை வெறும் கண்துடைப்பு; ஏற்கெனவே ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் இதேபோன்று ஆலை மூடல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவாக எடுக்க வேண்டும்!'' என்று தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின், ஆளும்கட்சிக்கு அழுத்தம் கொடுத்துவருகிறார். இதே கோரிக்கையை வலியுறுத்தி சட்டசபையிலிருந்து தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடல் ஆணை உண்மையிலேயே பயனளிக்கக்கூடியதுதானா...? என்ற கேள்வியை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் கேட்டோம்....

``பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்ட தமிழக ஆட்சியாளர்கள் தொடர்ந்து உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பிவருகின்றனர்.  அப்பாவி பொதுமக்களை தீவிரவாதிகள், கொலைகாரர்கள் என சித்திரிப்பதும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தவர்களது உயிர்களைக் காப்பாற்ற துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இட்டுக்கட்டி செய்தி வெளியிட்டு வருவதும் கண்டிக்கத்தக்கது. துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு உத்தரவிட்டது இரண்டு துணை வட்டாட்சியர்கள்தான் என்று முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதில் பல்வேறு சந்தேகக் கேள்விகள் எழுகின்றன.

கே.பாலகிருஷ்ணன்

தற்போது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவினை மே மாதம் 22-ம் தேதிக்கு முன்னால் வெளியிட்டிருந்தால், தூத்துக்குடியில் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டுக்கு 13 உயிர்கள் பலியாகியிருக்காது. மேலும், பலருக்கு குண்டு பாய்ந்திருக்காது, தடியடி காயங்கள் ஏற்பட்டிருக்காது. 

ஆலையை மூட வேண்டுமென போராடிய மக்கள் மீது அடக்குமுறையை ஏவி, அப்போராட்டத்தை அடக்கிட அரசு முனைந்தது. ஆனால், தமிழகம் முழுவதும் ஏற்பட்ட கொந்தளிப்புக்கும், மக்களின் எதிர்ப்புக் குரலுக்கும் அரசு பணிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதன் விளைவே இந்த உத்தரவு.தற்போது ஆலையை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டிருந்தாலும், வேதாந்தா நிர்வாகம் மோடி அரசின் செல்வாக்கோடு உச்சநீதிமன்றத்தில் தங்களுக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற முயல்வார்கள். தமிழக அரசு நீதிமன்றத்தில் கோட்டை விட்டு விட்டு மீண்டும் ஆலையை நீதிமன்ற உத்தரவின் மூலம் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் மீண்டும் மக்களது கொந்தளிப்புக்கு ஆளாகவேண்டிய அவசியம் ஏற்படும்!'' என்று எச்சரித்தவர் தொடர்ந்து தனது கருத்தையும் நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

``இந்த உண்மையை ஆட்சியாளர்களும் புரிந்திருக்கிறார்கள் என்பதால்தான், செத்த பாம்பை அடிப்பதுபோல் அடித்து 'ஆலை மூடல்' உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்கள். ஏனெனில், ஆலைக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு இவ்வளவு வீரியமாக இருந்துவரும் சூழலில், நீதிமன்ற அனுமதியோடு ஆலையை செயல்பட வைக்க முயன்றாலும்கூட, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்தியப் போலீஸ் பாதுகாப்போடு ஒரு ஆலையை நடத்தமுடியுமா என்ன....? எனவே, எதிர்காலத்திலும்கூட ஸ்டெர்லைட் ஆலையை திறக்கமுடியாது என்றே நான் கருதுகிறேன்'' என்கிறார் நம்பிக்கையுடன்.

ஸ்டெர்லைட் விவகாரத்தைக் கூர்ந்து கவனித்துவரும் அரசியல் விமர்சகர்களோ, ''ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக அமைச்சரவை கூடி அவசரச் சட்டம் இயற்றினால், அது அரசின் கொள்கை முடிவாகக் கருதப்படும். அப்படி அரசின் கொள்கை முடிவாக உள்ள விஷயங்களில், நீதிமன்றமும் தலையிட முடியாது. எனவே, இவ்விஷயத்தில், அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் அல்லது அவசரச் சட்டம் இயற்ற வேண்டும். அதுதான் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வாக இருக்கும்'' என்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!