2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கவுன்டவுண் தொடங்கியது..!

2019-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கவுன்டவுண் தொடங்கியுள்ளது.

உலகக்கோப்பை

photo credit: @ICC

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, அடுத்த ஆண்டு மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ள இத்தொடருக்கு இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் தகுதிபெற்றுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா 9 போட்டிகளில் விளையாட உள்ளன. இதில் தகுதி பெறும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையமுடியும். இந்தியா, தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. மேலும், தனது பரம வைரியான பாகிஸ்தானை ஜூன் 16-ம் தேதி எதிர்கொள்கிறது. இதற்கிடையே, அடுத்த ஆண்டு தொடங்க உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கவுன்டவுண் நேற்று தொடங்கியுள்ளது. 

இதைக் கொண்டாடும் விதமாக, லண்டனில் உலகக்கோப்பை அறிமுக விழா நடைபெற்றது. முன்னாள் வீரர்கள் ஆலன் டொனால்டு, வாக்கர் யூனிஸ் மற்றும் தற்போதைய இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், உலகக்கோப்பைக்கு இன்னும் 365 நாள்கள் உள்ளதைக் குறிக்கும் விதமாக, ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளது. சில கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றுள்ள ஆல்பத்தையும் வெளியிட்டுள்ளது. முன்னதாக, போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை இரண்டு கட்டங்களாக செய்யப்படும். முதற்கட்டமாக, தற்போது தொடங்கியுள்ள விற்பனை நாளை வரையும், அடுத்த கட்டமாக செப்டம்பர் மாதமும் நடைபெற உள்ளது. இதை www.cricketworldcup.com என்ற இணையதளத்தின் மூலமாக புக் செய்ய முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!