வெளியிடப்பட்ட நேரம்: 10:39 (31/05/2018)

கடைசி தொடர்பு:11:00 (31/05/2018)

`தம்பி... கறுப்புச்சட்டையைக் கழட்டிடுப்பா' - தூத்துக்குடியில் கலங்கவைத்த மூதாட்டியின் குரல்!

`தம்பி... கறுப்புச்சட்டையைக் கழட்டிடுப்பா' - தூத்துக்குடியில் கலங்கவைத்த மூதாட்டியின் குரல்!

துப்பாக்கிகள் உயிர்களை வேட்டையாடி ஓய்ந்திருந்தன. அவற்றின் குழல்களிலிருந்து கிளம்பிய புகைமட்டுமே காற்றில் மிச்சமிருந்தது. கொஞ்சம் உன்னிப்பாக காது கொடுத்தால் சில மரண ஓலங்களையும் நீங்கள் காற்றில் கேட்கக்கூடும். தூத்துக்குடியில் நாங்கள் சென்று இறங்கிய நாளில் இதுதான் நிலைமை. 'சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டது' என அன்றே சொல்லப்பட்டிருந்ததுதான். அந்த அறிவிப்பு ஒருவேளை துப்பாக்கிகளைக் குறிப்பதாக இருக்கலாம். நாங்கள் பார்த்த அத்தனை மனிதர்களும் வெறித்த பார்வையோடு சாலைகளைக் கடக்கிறார்கள். எல்லாரிடமும் சொல்வதற்கு ஏதோவொன்று இருக்கிறது. ஆனால், சொல்வதையும் ஏதோவொன்று தடுக்கிறது. அதுதானே அதிகார மையத்துக்கும் வேண்டும்.

தூத்துக்குடி

முதலில் சென்றது மருத்துவமனைக்குத்தான். ஐந்தாம் தளத்தில் அடைபட்டிருக்கிறார்கள் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அத்தனைப் பேரும். கை, கால், முகம், தலை என பாரபட்சமில்லாமல் அவர்களின் உடல்களில் விளையாடியிருக்கிறது லத்தி. வலி, அதிர்ச்சி, அயர்ச்சி என கடக்கும்போதே நமக்கு கதைகளைச் சொல்லிவிடுகின்றன கட்டில்கால்கள். இதுநாள்வரை மரணம் உங்களைப் பாதிக்காத விஷயமாக இருந்திருக்கலாம். ரத்தவாடை உங்களுக்கு குமட்டலைக் கொடுக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், இவர்களின் மத்தியில் நிற்கும்போது உங்களின் உறுதி நிச்சயம் உடையத்தான் போகிறது. 

உடல்நிலை சரியில்லாத ஒன்றரை வயது மகனோடு ஒரே கட்டிலில் படுத்திருக்கிறார் கூட்டத்தில் அடிவாங்கிய தந்தை. 'அடிக்காதீங்கய்யா அடிக்காதீங்கய்யா' என குறுக்கே விழுந்து மற்றவர்களுக்கு விழவேண்டியதை தன்மேல் தாங்கிய திருநங்கைகள் சிலர் அங்கே இருக்கிறார்கள். முன்பே ஒரு விபத்தில் துண்டாகி பாதியாகிவிட்ட கையில் இப்போது குண்டு பாய்ந்து செயலிழந்து போய்க் கிடக்கும் ஒருவரையும் நீங்கள் கடந்துவர வேண்டியிருக்கும். மறக்காமல் அவரின் நெஞ்சிலிருந்து சொட்டிக்கொண்டிருக்கும் ரத்தம் கீழே பையில் சேகரிக்கப்படுவதையும் பாருங்கள் - அரசு சொல்வதன்படி, இவர்கள்தான் அந்த கலவரக்காரர்கள். ச்சே ச்சே! அதென்ன தமிழில்? ஆன்டி சோஷியல் எலிமென்ட்ஸ் (அ) ஃப்ரின்ஜ் எலிமென்ட்ஸ்!

இந்த நூறுநாள் வனவாசம் தொடங்கிய புள்ளி குமரேட்டியாபுரம் என்னும் கிராமம். ஸ்டெர்லைட் ஆலைக்கு மிக அருகில் இருக்கிறது இந்தக் கிராமம். அங்கே நாம் சென்றபோது நம்மை வரவேற்றதெல்லாம் இறுக்கமான முகங்கள்தான். நம்மிடம் பேசப் பேச இறுக்கம் உடைந்து கண்களில் நீர் கோக்கிறார்கள். 'ஒரு உசுரு கூட இந்த ஆலையால போய்டக்கூடாதுனுதானேய்யா இவ்வளவு போராடுனோம். இப்ப ஏகப்பட்ட உசுரு போய்டுச்சே! உசிலம்பட்டில இருந்து இங்க வந்து சாகணும்னு அவருக்கென்ன தலையெழுத்தா? எங்க கையெல்லாம் ரத்தக்கறை ஆயிடுச்சேய்யா! இத எங்க போய்க் கழுவுறது? போதுஞ்சாமி எல்லாம்' என தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார் ஒரு அக்கா! 

தூத்துக்குடி

கனத்த மவுனத்தோடு வண்டியை நோக்கித் திரும்பி நடந்தால் பின்னாடியே ஓடிவருகிறார் ஒரு மூதாட்டி. 'யய்யா உனக்கு புண்ணியமாப் போகும், கறுப்புசட்டையை கழட்டிடுய்யா! அதப் பார்த்தாலே அடிக்கிறாங்க. எல்லாம் சின்னப்புள்ளைங்கய்யா! தலையிலயும் உடம்புலயும் ரத்தம் வடிய அதுங்க கிடக்குறத பாக்கமுடியல சாமீ... நா வேணா என் வீட்டுல இருந்து ஒரு சட்டை எடுத்தாரட்டா?' என கையைப் பிடித்து அழுகிறார். இதற்கு என்னிடம் பதிலில்லை. உங்களிடம்...? அவரின் நடுங்கும் குரல் நடந்த அத்தனை கொடூரங்களையும் நமக்குக் கடத்துகிறது. நாம் சென்றதற்கு முந்தைய நாள் இரவில் கூட அந்தக் கிராமத்தில் இறங்கி தங்கள் வெறியை இளைஞர்கள் மேல் காட்டியிருக்கிறார்கள் காக்கி வீரர்கள்.

காக்கிகள் ருத்ரதாண்டவம் ஆடிய இன்னொரு இடம் திரேஸ்புரம். அரசியல் கட்சிகள், காவல்துறை, ஊடகங்கள் என எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை இழந்த அந்தப் பகுதி மக்கள் பாதையை அடைத்து ஒரு பெரிய படகை நிறுத்தியிருக்கிறார்கள். நம்மை அழைத்துச் சென்றவர் அந்தப் பகுதி மக்களுக்கு பரிச்சயம் என்ற ஒரே காரணத்துக்காக நம்மிடம் பேசினார்கள் அவர்கள். `போராட்டத்துல எங்க ஏரியாக்காரர் ஒருத்தரை சுட்டுட்டாங்கனு சொன்னாங்க. ஆம்பளைங்க போனாதான் சுடுவாங்கனு நாங்க பொம்பளையாளுங்களா கிளம்புனோம். மதியம் ஒரு மூணேகால் மணி இருக்கும். எங்க ஏரியா பாலத்துகிட்ட ரெண்டு ஜீப் எங்களை கடந்து வேகமா போச்சு. மூணாவதா ஒரு வேன் வந்தது. அதுவும் கடந்து போகும்னுதான் நினைச்சோம். திடீர்னு நிறுத்தி படபடனு துப்பாக்கியோட போலீஸ்காரங்க இறங்குனாங்க. பதறியடிச்சுகிட்டு பக்கத்துல இருந்து வீடுகளுக்குள்ள ஒளிஞ்சோம். நான் ஒரு கட்டிலுக்கடியில படுத்துட்டேன்.

பக்கத்து வீட்டுக்குள்ள நுழைஞ்சு அங்கே இருந்த டி.வி, ஃப்ரிட்ஜை எல்லாம் அடிச்சு நொறுக்குனாங்க. கொஞ்ச நேரத்துல சத்தமே இல்ல. சரி, போய்ருப்பாங்கனு நினைச்சு வெளியே வந்தோம். ஆனா, அவங்க அங்கேயேதான் இருந்தாங்க. 'இன்னிக்குதான் நமக்கு கடைசிநாள்'னு முடிவே பண்ணிட்டேன். அந்தப் போலீஸ்காரன் என்ன நினைச்சானோ டப்புனு எங்களுக்குப் பின்னால நின்னுட்டுருந்த ஜான்ஸி அக்காவை சுட்டுட்டான். தலைல இருந்து மூளை வெளியே வந்து மண்ணுல விழுறதைப் பார்த்தேன் தம்பி! (குரல் நடுங்குகிறது) ஐயோ! இந்த ஜென்மத்துக்கு எனக்கு ஒறக்கமில்ல' என பதற்றத்தோடு பேசுகிறார் சம்பவத்தை நேரில் பார்த்த அந்தப் பெண். காவல்துறையின் கழுகுப்பார்வை சுற்றிச் சுற்றி வருவதால் அவரின் பெயர் வெளிவராமல் இருப்பதே நலம்.

சிதறிய தலையை விட்டுவிட்டு எஞ்சிய உடலை நொடி நேரத்தில் அருகிலிருந்த பேனர் துணியைக் கிழித்து அதில் வைத்து சுருட்டி எடுத்துச் சென்றிருக்கிறது காவல்துறை. 'அதெப்படிண்ணே கொஞ்சமும் உறுத்தலில்லாம அப்படி போகமுடியும்?' என கேட்டுக் கேட்டு மாய்கிறான் அருகிலிருந்த சிறுவன். இது மட்டுமா என்ன? உயிர் விலகும் கடைசிக் கேவலில் இருக்கும் ஒருவனை 'நடிக்காதடா டேய்' என சொல்ல அவர்களால் முடிகிறது. எதிர்த்துக் கேள்வி கேட்ட இளைஞியை வாயில் சுட அவர்களால் முடிகிறது. தங்கையின் சடங்குக்காக சுற்றிக்கொண்டிருந்த பொறுப்பான அண்ணனைச் சுட அவர்களால் முடிகிறது. இன்னும் எத்தனை எத்தனையோ?

கொலை சக உயிரின் மீது நிகழ்த்தப்படும் ஆகப்பெரிய வன்முறை. வன்மத்தின் பெயரால் நீங்கள் கொலை செய்பவர்களுக்குக் கூட ஏதோவொரு வகையில் எதிர்வினையாற்றும் வெளி இருக்கிறது. ஆனால், அதிகாரத்தின் பெயரால் நீங்கள் கொலை செய்யும்போது அவர்களால் குரலெழுப்பக் கூட முடிவதில்லை. இதுதான் வீரம் என நினைத்தால்... நாளை அந்த எண்ணத்தை உங்களின் வாரிசுகளே கேள்விகளால் உடைப்பார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்