`சுய லாபத்துக்காக வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு' - பா.ஜ.க-வைச் சாடும் சிவசேனா!

தேர்தல் நடைமுறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டால், அது ஜனநாயகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு சிவசேனா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே

நாடு முழுவதும் காலியாக உள்ள 4 மக்களவைத் தொகுதி மற்றும் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை  இன்று நடைபெற உள்ளது. இதற்கிடையே, கர்நாடக சட்டப்பேரவைத் தொகுதியான ஆர்.ஆர். நகர்  மற்றும் மக்களவைத் தொகுதியான மகாராஷ்டிராவின் பல்கர் மற்றும் பந்தரா - கோண்டியா ஆகிய இடங்களில் தேர்தல் நடைபெறும்போது, ஆங்காங்கே வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால், சில மணி நேரம் தேர்தல் தடைப்பட்டாலும், பின்னர் புது இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. 

இதற்கு, சிவசேனா கட்சி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதுடன், மத்திய பா.ஜ.க அரசையும் தேர்தல் ஆணையத்தையும் விமர்சித்து அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,  ``பா.ஜ.க அரசு சதி செய்யும் மனப்பான்மையுடன் தன்னுடைய சுய லாபத்துக்காக வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் செய்கிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மத்திய அரசின் அடிமைகளைப் போல உள்ளது. நமது நாட்டில் ஜனநாயகம் நெடுங்காலமாக இருப்பதால்தான் உலக அளவில் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருக்கிறது. 

ஆனால், தற்போது இதை வாக்குப்பதிவு இயந்திரம் அழித்துவிடும்போல இருக்கிறது. வழக்கமாக, வாக்குப்பதிவு இயந்திரத்தை வாங்கும் நிறுவனத்திடமிருந்து வாங்காமல், இந்தமுறை வேறு ஒரு தனியார் நிறுவனத்திடம்  இயந்திரங்களைக் கொள்முதல் செய்திருப்பது, இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒருகாலத்தில் பா.ஜ.க எதிர்த்துவந்தது நினைவிருக்கும். ஆனால், தற்போது நாடே இந்த இயந்திரத்தை எதிர்க்கும்போது, பா.ஜ.க மட்டும் இதை ஆதரிக்கிறது. தேர்தல் நடைமுறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டால், அது ஜனநாயகத்துக்கு ஆபத்து என்பதை உணரவேண்டும்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!