வெளியிடப்பட்ட நேரம்: 10:27 (31/05/2018)

கடைசி தொடர்பு:11:26 (31/05/2018)

கச்சநத்தம் படுகொலை 3 ஆக உயர்ந்தது! இரவில் போராட்டம் நடத்திய இயக்குநர் பா.இரஞ்சித்

கச்சநத்தம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே நடந்த மோதலில் பலியானவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. இதனால் போலீஸாரும் பொதுமக்களும் பதற்றத்தோடு காணப்படுகிறார்கள்.
 
கச்சநத்தம்
 
சிவகங்கை மாவட்டம், திருப்பாசேத்தி  அருகே கச்சநத்தம் கிராமத்தில் மாற்று சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் ஐம்பதுக்கும மேற்பட்ட மாற்று சாதியினர் வந்து பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிகளைச் சூறையாடியாடியதில் 
8 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது. ஆறுமுகம் என்பவர் இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ஒருவரான சண்முகநாதன் மதுரை அரசு மருத்துவமனையில் சிசிச்சை பலனின்றி இறந்தார். இவரை தொடர்ந்து சந்திரசேகர் என்பவர் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் இன்று இறந்துபோனார். மற்றவர்கள் அதே மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 
இறந்தவர்களின் உடலை வாங்காமல் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே மூன்று நாள்களாகப் பாதிக்கப்பட்ட மக்கள் போராடி வருகிறார்கள். இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சிவகங்கை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன், சி.பி.எம் கட்சி சார்பாக கனகராஜ், சிவகங்கை மாவட்ட சி.பி.எம் செயலாளர் கந்தசாமி, மள்ளர் கழகம் அண்ணாமலை, முன்னாள் எம்.எல்.ஏ முருகவேல் ராஜ், மூவேந்தர் புலிப்படை பாஸ்கரன் போன்றவர்கள் ஒருங்கிணைப்பு குழுவாக இருந்து இப்போராட்டத்தை வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள். இப்படுகொலை சம்பவத்தைக் கண்டித்து வி.சி.க, புதிய தமிழகம், தமிழ்புலிகள் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து இப்போராட்டத்தில் கலந்திருக்கிறார்கள்.
 
இந்நிலையில் திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் நேற்று இரவு போராட்டக் களத்தில் கலந்துகொண்டார். இன்று மருத்துவமனையில் காயம்பட்டவர்களை சந்திக்கிறார். இதைத்தொடர்ந்து எஸ்.சி. எஸ்.டி கமிஷன் பார்வையிட இருக்கிறது. இந்நிலையில் மூன்றாவதாக சந்திரசேகர் உயிரிழந்த சம்பவம் இந்த மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியி ருக்கிறது. இதையடுத்து மாற்று சாதியினர் இருக்கக்கூடிய ஆவாரங்காடு, தஞ்சாக்கூர், ஆலடிநத்தம், மாரநாடு பகுதிகளில் போலீஸார் இன்று அதிகமாகக் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் ஒரு சாதியினருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்கிற குற்றச்சாட்டை பாதிக்கப்பட்ட மக்கள் முன்வைத்திருக்கிறார்கள். நேர்மையான ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உடனடியாக நியமித்தால் மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். இதைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கை போராட்டக்காரர்களிடம் வலுத்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க