இலங்கைக்கு சட்ட விரோதமாகத் திரும்பிய 6 அகதிகள் நடுக்கடலில் கைது! | 6 refugees arrested illegally enter into Sri Lanka

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (31/05/2018)

கடைசி தொடர்பு:11:45 (31/05/2018)

இலங்கைக்கு சட்ட விரோதமாகத் திரும்பிய 6 அகதிகள் நடுக்கடலில் கைது!

 தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக சென்ற 6 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன் துறை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாகச் சென்ற 6 இலங்கைத் தமிழர்களை, இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்து காங்கேசன் துறை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

மண்டபத்தில் உள்ள அகதிகள் மறுவாழ்வு முகாம்

இலங்கையில், தமிழர்கள் வாழும் பகுதிகளில் இலங்கை ராணுவத்தினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அவர்கள் அகதிகளாக உலகின் பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். அதிகம் பேர் தமிழகத்துக்கு அகதிகளாக வந்தனர்.  அவர்கள், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கையில் நடந்த போர் முடிவுக்குவந்த நிலையில், தாயகம் திரும்ப பல்வேறு முகாம்களில் உள்ள அகதிகள் விரும்புகின்றனர். ஆனால், முறைப்படி அனுமதிபெற்று இலங்கை செல்வதென்றால், விமானம் மூலமாகத்தான் செல்ல முடியும்.  அதற்கு, அதிக கட்டணம் செலவாகும். எனவே, தாயகத்துக்குத் திரும்ப மனம் இருந்தும் போதிய பணம் இல்லாததால், ஆயிரக்கணக்கான அகதிகள் நாடு திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர்.

இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்துள்ள அகதிகளை அரசு செலவில் அனுப்பிவைக்க வேண்டும் என பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும், அது இன்னும் ஏற்கப்படாமலேயே உள்ளது. இதனால், இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்பும் சிலர், அரசின் உரிய அனுமதி ஏதும் பெறாமல் சட்ட விரோதமாக படகுகளில் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு இவ்வாறு படகில் சென்ற 6 அகதிகளை அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்தனர். உரிய விசாரணைக்குப் பின், அகதிகள் 6 பேர் மற்றும் அவர்களை படகில் ஏற்றி வந்த மன்னார் பகுதியைச் சேர்ந்த படகோட்டிகள் ஆகியோரை காங்கேசன் துறை போலீஸார் வசம் இலங்கைக் கடற்படையினர் ஒப்படைத்தனர். இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுத்துவருவதாகக் கூறும் மத்திய, மாநில அரசுகள் ள் தங்களின் சொந்த நாட்டிற்குச் செல்ல விரும்புபவர்களை அரசு செலவிலேயே அனுப்பிவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.