வெளியிடப்பட்ட நேரம்: 12:26 (31/05/2018)

கடைசி தொடர்பு:12:26 (31/05/2018)

`கனவு உலகிலாவது ஸ்டாலின் மகிழ்ச்சியாக இருந்தால் நல்லது' - ஜெயக்குமார் கிண்டல்!

''வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது'' என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

ஜெயக்குமார்

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசினார். அதில், ``எந்தவிதத்திலும் தமிழகத்தில் பயங்கரவாதம் தலைதூக்க விடமாட்டோம். அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் யார் நடந்துகொண்டாலும், அரசு நடவடிக்கை எடுக்கும். விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. கலவரத்துக்கு யார் யார் காரணம் என்பதை விசாரணை கமிஷன் கண்டறியும். பொதுமக்கள் என்றைக்குமே அரசுக்கு நண்பர்கள்தான். ஜெயலலிதா வழியில் வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடக்கிவருகிறோம். எங்களுக்கு யாரும் உத்தரவு பிறப்பிக்கவேண்டிய அவசியமில்லை. யாரையும் சார்ந்து நாங்கள் இல்லை.  

தி.மு.க வேண்டுமென்றால் மற்றவர்களுக்கு எடுபிடியாக இருக்கலாம். நாங்கள் யாருக்கும் எடுபிடியாக இருக்கவில்லை. ஸ்டாலின் கனவு உலகில் சஞ்சரிக்கிறார் என நான் ஏற்கெனவே கூறியது உண்மையாகியுள்ளது. அண்ணா அறிவாலயத்தை தலைமைச்செயலகமாக நினைத்துக்கொண்டு, டம்மி சட்டசபையை நடத்தியிருக்கிறார். அங்கு முதல்வராக இருப்பதுபோல மாய உலகில் ஸ்டாலின் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  கனவு உலகிலாவது ஸ்டாலின் மகிழ்ச்சியாக இருந்தால் நல்லது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க