வெளியிடப்பட்ட நேரம்: 12:51 (31/05/2018)

கடைசி தொடர்பு:12:51 (31/05/2018)

துளித் துளியாய் சேரும் குடிநீர்... வீணடிக்கப்படும் அவலம்..! ராமேஸ்வரம் நகராட்சியின் பதில் என்ன?

 ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வரும் நிலையில் இருக்கும் குடிநீரும் வீணாகும் நிலையில் ராமேஸ்வரம் நகராட்சி குடிநீர் குழாய்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன.

துளித் துளியாய் சேரும் குடிநீர்... வீணடிக்கப்படும் அவலம்..! ராமேஸ்வரம் நகராட்சியின் பதில் என்ன?

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு கடுமையாக இருந்துவரும் நிலையில், ராமேஸ்வரம் நகராட்சி குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்துள்ளதால், இருக்கும் குடிநீரும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் நகராட்சி பகுதியில் வீணாகும் குடிநீர்

ராமநாதபுரம் மாவட்டம் இயற்கையிலேயே கடும் வறட்சி நிறைந்த மாவட்டமாகும். அதுவே, கோடைக்காலம் என்றால் குடிநீர் தட்டுப்பாடு மிகவும் அதிகமாக இருக்கும். இந்தக் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க, காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கான குழாய்கள் ஆங்காங்கே சேதமடைந்துள்ளதால், அந்தக் குழாய்கள் மூலம் அனுப்பப்படும் தண்ணீர் வீணாக வெளியேறி, சாலையோரங்களில் வழிந்தோடுகிறது. இதனால், குடிநீர் கிடைக்காத மக்கள் பல அடி ஆழத்துக்கு ஊற்று தோண்டி அதிலிருந்து கிடைக்கும் நீரைச் சிறுகச்சிறுக இரவு, பகலாகச் சேகரித்து தாகத்தை தீர்த்து வருகின்றனர். தவிர, இம்மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குடிநீருக்காகப் போராட்டங்களில் ஈடுபடும் நிலையும் உள்ளது.

குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கவும், குழாய்கள் பழுதடைந்துள்ளதால் வீணாக வெளியேறும் குடிநீரைத் தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. குடிநீர்த் தட்டுப்பாடு மற்றும் வீணாவது குறித்த தகவல்களைத் தெரிவிக்க நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் தனி தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க மாவட்ட நிர்வாகம் ஒருபுறம் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மற்றொருபுறம் நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் குடிநீர் வீணடிக்கப்படும் நிலை தொடர்கிறது. ராமேஸ்வரம் நகராட்சிப் பகுதியில் உள்ள 21-வது  வார்டுக்குட்பட்ட பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் மட்டும் 24 மணி நேரமும் குடிநீர் திறந்து விடப்பட்டு, வீணாக வழிந்தோடுவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவிக்கிறார்கள். வேறு சில வார்டுகளுக்கு வாரத்துக்கு ஒருமுறைகூட குடிநீர் வழங்குவதில்லை. இதனால் தனியாரிடம் விலைகொடுத்து குடிநீர் வாங்கும் நிலையிலேயே மக்கள் உள்ளனர். ராமேஸ்வரத்தைப் பொறுத்தமட்டில் உள்ளூரில் கிடைக்கும் நிலத்தடிநீரை முறையாக விநியோகம் செய்தாலே தட்டுப்பாடு இல்லாமல் அனைத்துப் பகுதி மக்களுக்கும் குடிநீர் வழங்க முடியும். இதில் கடல் கடந்து கொண்டு வரப்படும் காவிரி நீரும் கூடுதலாக கிடைத்து வருகிறது. அப்படி இருந்தும் இந்த குடிநீரை முறையாக விநியோகம் செய்வதில் நகராட்சி அதிகாரிகள் கவனம் செலுத்துவதில்லை என்கின்றனர் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள். 

ராமேஸ்வரம் பகுதியில் அடைப்பான் இல்லாத குடிநீர் குழாய்

ராமேஸ்வரம் நகரப் பகுதியில் உள்ள 90 சதவிகித குடிநீர் குழாய்கள், திறந்து மூடும் வசதி இல்லாமல் நேரடியாக தண்ணீர் விழுவதால், ஏராளமான தண்ணீர் வீணாகிறது. ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்துக்கு அருகில் உள்ள மார்க்கெட் தெருவில், ஐந்து இடங்களில் உள்ள குடிநீர் குழாய்களில் இரும்புக் குழாய்களுக்குப் பதில் தரமில்லாத பி.வி.சி குழாய்கள், சுருள் பைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் குடிநீர் பிடித்தப் பின்னரும் அந்தக் குழாய்களில் இருந்து வெளியேறும் குடிநீர் வீணாகி, சாலையில் தேங்கிக் காணப்படுவதாகக் கூறுகின்றனர் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள்.

இதுகுறித்துப் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் குடிநீர் வீணாவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகராட்சியைப் பொறுத்தமட்டில் குடிநீர் பராமரிப்புக்கு என அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் உள்ளனர். துப்புரவுப் பணியாளர்கள் என்ற பெயரில் சிலர் குடிநீர் விநியோகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தேவையைவிடவும் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் இருந்தும் குடிநீர் விநியோகம் மட்டும் முறையாக நடப்பதில்லை. இதனால் மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் போவதுடன், இருக்கும் நிலத்தடி நீரும் வீணாகும் நிலை நீடிப்பதாக அவர்கள் அங்கலாய்க்கிறார்கள்.

கோடைக்காலத்தில் ஏற்படும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் இதுபோன்று, குழாய்கள் உடைப்பு காரணமாக வீணாகும் தண்ணீரைத் தடுக்க முன்வர வேண்டும் என்பதே ராமேஸ்வரம் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

ராமேஸ்வரம் நகராட்சி பொது குடிநீர் குழாய்கள் பராமரிப்பில் காட்டப்படும் அலட்சியம் குறித்து நகராட்சி பொறியாளர் அய்யநாதனிடம்  கேட்டதற்கு ``நான் பொறுப்பேற்று ஒரு மாதம்தான் ஆகிறது. ராமேஸ்வரத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏதும் இல்லை. நீங்கள் கூறும் பொதுக்குழாய்களில் குடிநீர் வீணாகும் புகார் குறித்து ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.


டிரெண்டிங் @ விகடன்