வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (31/05/2018)

கடைசி தொடர்பு:13:05 (31/05/2018)

பொறியியல் கட் ஆஃப்பில் அதிக மதிபெண் பெற்று அசத்திய அரசுப் பள்ளி மாணவர்கள்!

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நடத்தி வரும் எலைட் பள்ளியில் பயின்று பொறியியல் கல்லூரிகளுக்கான கட் ஆப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று அசத்திய மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு. 

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நடத்திவரும் எலைட் பள்ளியில் பயின்று, பொறியியல் கல்லூரிகளுக்கான கட் ஆஃப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று அசத்திய மாணவ மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் பாராட்டு. 

எலைட் பள்ளி மாணவர்களை  பாராட்டிய மாவட்ட ஆட்சியர்

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அரசுப் பள்ளிகளில் சிறப்பான முறையில் பயின்றுவரும் மாணவர்களை மெருகேற்றும் வகையில், மீள் திறன் பயிற்சி வகுப்புகள் (எலைட் கிளாஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. 2017-18 -ம் கல்வி ஆண்டில் ப்ளஸ் டூ பொதுத்தேர்வு எழுதி, இங்கு பயின்ற 43 மாணவர்களும் தேர்ச்சிபெற்றனர். இதில், பிரகாஷ் என்ற மாணவர் 1,126 மதிப்பெண்கள் பெற்றார். மேலும் 1,100 மதிப்பெண்களுக்கு மேல் 10 பேரும், ஏனைய 33 மாணவர்களும் 1,000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனர். மாணவர் பிரகாஷ், பொறியியல் சேர்க்கைக்கான கட் ஆஃப்பில் 199.25 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 195 கட் ஆஃப் மதிப்பெண்களை 10 மாணவர்களும், 190 கட் ஆஃப் மதிப்பெண்களை 22 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

இதன்மூலம், தமிழகத்தின் தலைசிறந்த அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு சிறந்த பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் பயின்று, இந்த அரிய சாதனைகளைப் படைத்த எலைட் பள்ளி மாணவ  மாணவிகளை மாவட்ட ஆட்சியர் நடராஜன் நேரில் சந்தித்துப் பாராட்டி, பரிசுகள் வழங்கினார். இந்த ஆண்டு எலைட் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இத்தகைய சாதனையை முன்னுதாரணமாகக்கொண்டு, நல்ல மதிப்பெண்கள் பெறும் வகையில் பயிலுமாறு கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், எலைட் சிறப்புப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.