வேளாண்மை, தோட்டக்கலைத் துறைகளில் 1,000 பேருக்கு அரசு வேலை! | Tamil Nadu Agriculture and Horticulture department announced more than 1000 job vacancy

வெளியிடப்பட்ட நேரம்: 13:33 (31/05/2018)

கடைசி தொடர்பு:13:33 (31/05/2018)

வேளாண்மை, தோட்டக்கலைத் துறைகளில் 1,000 பேருக்கு அரசு வேலை!

வேளாண்மை, தோட்டக்கலைத் துறைகளில் 1,000 பேருக்கு அரசு வேலை!

தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறையில் முதன்மையான அங்கமாக உள்ளது தோட்டக்கலைத் துறை. இதில் உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்காக 805 நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். 

தோட்டக்கலை

உதவி தோட்டக்கலை அதிகாரிகள், காய்கறி, மலர் சாகுபடி மற்றும் தோட்டக்கலை சார்ந்த பயிர் செய்துவரும் விவசாயிகளைச் சந்தித்து, தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை செயல்படுத்திவரும் திட்டங்களையும் மானியங்களையும் அவர்களுக்கு எடுத்துரைத்துப் பயன்பெறவைக்கும் பணியை முதன்மையாகச் செய்துவருகின்றனர். இவர்களுக்குச் சம்பளமாக 20,500 ரூபாய் முதல் 65,500 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. 

இந்தப் பணியைப் பெற, பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் இரண்டு ஆண்டுகள் டிப்ளோமா படித்திருக்க வேண்டும். டிப்ளோமா படிப்பு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அல்லது தமிழ்நாடு தோட்டக்கலை இயக்குநர் அல்லது காந்தி கிராமியப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். 

தற்போது அறிவிக்கப்பட்ட 805 பணியிடங்களில் 757 ரெகுலர் பணியிடங்களாகவும், 48 குறுகியகால பணியிடங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. குறுகியகால பணியிடங்களுக்குத் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பிரிவைச் சார்ந்தவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ரெகுலர் பணியிடங்களுக்கு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் போன்ற பிரிவைச் சார்ந்தவர்கள் 58 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர பிரிவைச் சார்ந்தவர்களுக்கு வயது வரம்பு 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுக்கு வயதுவரம்பு விலக்கு வழங்கப்படுகிறது. 

மே மாதம் 25-ம் தேதி முதல் ஜூன் மாதம் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி (11.8.2018) எழுத்துத்தேர்வு நடைபெறும். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் மற்றும் தஞ்சாவூரில் தேர்வு மையங்களை அமைத்துள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். 

எழுத்துத்தேர்வில் தாள் 1 மற்றும் தாள் 2 என இரண்டு தாள்கள் உண்டு. முதல் தாளில் டிப்ளோமா தகுதி அடிப்படையிலான தோட்டக்கலை சார்ந்த 200 கேள்விகள் கேட்கப்படும். 300 மதிப்பெண்கள். இரண்டாவது தாளில் பொது அறிவு மற்றும் சிந்தனைத் திறனை சோதிக்கும் வகையில் 100 கேள்விகள் கேட்கப்படும். 200 மதிப்பெண். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சார்ந்தவர்கள் குறைந்தபட்சமாக 150 மதிப்பெண் பெற வேண்டும். இதரப் பிரிவினருக்கு குறைந்தபட்ச மதிப்பெண்ணாக 200 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்தப் பாடப்பிரிவிலிருந்து கேள்விகள் கேட்கப்படும் என்பதற்கான பாடத்திட்டம் குறித்து விவரங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் உள்ளன. 

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நிரந்தரப் பதிவாக 150 ரூபாய் செலுத்திய பிறகு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே நிரந்தரப் பதிவுக் கட்டணம் செலுத்தியவராக இருந்தால் (ஐந்து ஆண்டுகளுக்குள்) நிரந்தரப் பதிவுக் கட்டணம் செலுத்தவேண்டியதில்லை. தேர்வுக்கட்டணமாக 100 ரூபாயைச் செலுத்தினால் போதும். மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்தோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி இனத்தைச் சேந்தவர்களுக்கு தேர்வுக்கட்டணமாகச் செலுத்துவதிலிருந்து விலக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வை மூன்று முறைக்குக் குறைவாக தேர்வு எழுதியவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு பெறலாம். முன்னாள் ராணுவத்தினர் இரண்டு முறைக்குக் குறைவாகப் பயன்படுத்தியிருந்தால் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு பெறலாம். 

805 பணியிடங்களில் தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு 20 சதவிகிதமும், உடல் ஊனமுற்றோருக்கு 4 சதவிகிதமும் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் 24.6.2018. மேலும், விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/notifications/2018_10_AHO.pdf 

மேற்கண்ட பணியைத் தவிர, வேளாண்மை துறை சார்ந்த பட்டப்படிப்பு படித்தவர்கள், தமிழக வேளாண் விரிவாக்க அலுவலர் பணிக்காகவும் விண்ணப்பிக்கலாம். மொத்தப் பணியிடங்கள் 192.  விண்ணப்பிக்க கடைசி நாள் 02.06.2018. இந்தப் பணிக்கான தேர்வு 14.07.2018 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


டிரெண்டிங் @ விகடன்