`மோடி சொல்வதைக் கேட்டு ரஜினி ஆடுகிறார்' - சாடும் வைகோ

'ஸ்டெர்லைட் வன்முறை குறித்த நடிகர் ரஜினிகாந்த்தின் கருத்தை ஏற்க முடியாது' என வைகோ தெரிவித்துள்ளார். 

வைகோ

சென்னை விமான நிலையத்தில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் ஸ்டெர்லைட் வன்முறைகுறித்த நடிகர் ரஜினிகாந்த்தின் கருத்துகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர்,  ``வேல்முருகனைக் கைதுசெய்து பாழடைந்த மண்டபத்தில் தங்கவைத்தது மிகப்பெரிய கொடுமை. அவரை காவல்துறையினர் கொடுமைப்படுத்தினர். போலீஸின் நடவடிக்கையால்தான் வேல்முருகனுக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெய்வேலி தமிழ்நாட்டுக்கு சொந்தம் என வேல்முருகன் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது. நெய்வேலி என்எல்சி தமிழர்களின் வேர்வையில் உருவானவை. அவை தமிழகத்திற்கே சொந்தம். இதைச் சொன்னதற்கு தேசத்துரோக வழக்கு பதிந்தது கண்டத்துக்குரியது. இதே கருத்தை நானும் சொல்கிறேன். என் மீதும் தேச துரோக போடா தயாரா? இதேநிலை நீட்டித்தால் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து ஏற்படும். 

மகாராஷ்ட்ராவில் பட்டப் பகலில் சம்மட்டி கடப்பாறையுடன் ஆலையை அடித்து நொறுக்கினர். மூன்றாவது நாளே சரத்பவார் ஸ்டெர்லைட் உரிமத்தை ரத்துசெய்தார். அதன்பின்னர், தமிழகத்தில் ஜெயலலிதாதான் ஆலைக்கு அனுமதி வழங்கினார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது தான் அரசியல் மைதானத்துக்கு வந்துள்ளார். 22 ஆண்டுகள் போராடி இருக்கிறோம். ஸ்டெர்லைட் மீது ஒரு கல்வீச்சு நடந்தது கிடையாது.  22-ம் தேதி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்தவுடன், காட்டுமிராண்டித்தனமான காவல்துறையின் அடக்குமுறை என்று சொல்லிவிட்டு இன்று போய் விஷக்கிருமிகள் ஊடுருவிவிட்டதாகச் சொல்கிறார். அவர் கூறுவதை ஏற்க முடியாது. இவர்கள் எல்லாம் மோடி சொல்வதைக் கேட்டு ஆடுகிறார்கள்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!