வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (31/05/2018)

கடைசி தொடர்பு:14:25 (31/05/2018)

கர்நாடகாவில் இடைத்தேர்தல்! பாஜகவை வீழ்த்தியது காங்கிரஸ்

ஆர்.ஆர். நகரில் அதிகப்படியான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் சமயத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, அந்தத் தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. இதற்கான வாக்குப் பதிவு, கடந்த 28-ம் தேதி என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. கர்நாடகாவில், தேர்தலுக்குப் பிறகு உண்டான காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணியாக இருந்தாலும், ஆர்.ஆர். நகரில் காங்கிரசை ஆதரிக்கும்படி தேவகவுடாவிடம் டி.கே.சிவக்குமார் கேட்டுக்கொண்டார். ஆனால், தேவகவுடா சட்டமன்றத்தில் மட்டுமே காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி; சட்டமன்றத்திற்கு வெளியே காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி கிடையாது என்று ஆர்.ஆர்.நகரில் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார். 

ஆர்ஆர்நகர் டி.கே.சிவக்குமார்

காங்கிரஸ் தலைவர்கள், பி.ஜே.பி போன்ற மதவாத கட்சிகளை கர்நாடகாவில் ஆட்சிசெய்ய விடாமல் காங்கிரஸ் தடுத்துள்ளது என்ற ரீதியில் பிரசார களத்தை அமைத்து, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் ஆர்.ஆர். நகரில் வாக்கு சேகரித்தனர். மேலும், டி.கே.சிவக்குமாரின் தம்பி சுரேஷின் பெங்களூரு ஊரக எம்.பி., தொகுதிக்குள் ஆர்.ஆர்.நகர் தொகுதி வருவதால், ஆர்.ஆர்.நகர் தொகுதியில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்று தீவிரம் காட்டி பிரசாரம் மேற்கொண்டார், டி.கே.சிவக்குமார். 

இன்றைய தினம் ஆர்.ஆர்.நகரில் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருந்த நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்த டி.கே.சிவக்குமார், காங்கிரஸின் வெற்றிகளை சகித்துக்கொள்ள முடியாத பி.ஜே.பி, என் மீதும் என்னைச் சார்ந்த உறவினர்கள், நண்பர்கள் என 11 இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்த, சிபிஐ நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளதாக எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. பி.ஜே.பி அரசின் இந்த அடக்குமுறைக்கெல்லாம் பயந்து அடங்கிவிடுபவர்கள் நாங்கள் அல்ல. காரணம், நாங்கள் சட்டத்தை மதித்து  நடப்பவர்கள். மேலும், கிராமத்தில் இருந்து வந்தவர்கள். கிராமத்திற்கே உரிய தைரியமும், மூர்க்கத்தனமும் எங்களிடம் உள்ளது. எனவே, பி.ஜே.பி-யின் எத்தகைய அடக்குமுறைகளையும் சந்திக்கத் தயாராகவே உள்ளோம் என்றார், டி.கே.சிவக்குமார். 

இந்த நிலையில், இன்று காலை தொடங்கிய ஆர்.ஆர். நகரின் வாக்கு எண்ணிக்கையில், முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்தினா நாயுடு முன்னிலை வகித்தார். முடிவில் அவர் 25,492 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்தினா நாயுடு 1,08064 வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளர் முனிராஜா கவுடா 82,572 வாக்குகளும், ஜேடிஎஸ் வேட்பாளர் ராமச்சந்திரா 60,360 வாக்குகளும் பெற்று தோல்வியடைந்தனர். கர்நாடக காங்கிரஸ் தரப்பில் உற்சாகக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க