ரஜினி மன்றத்தில் மீண்டும் சத்திய நாராயணன்!

ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அளவிலான நிர்வாகியாக நியமிக்கப்பட இருக்கிறார், சத்திய நாராயணன். 'ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகியாக இருந்த காலத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் தனக்கென ஒரு கூட்டத்தை வைத்திருந்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பொறுப்புக்கு வர இருக்கிறார் சத்தி' என்கின்றனர், மக்கள் மன்ற வட்டாரத்தில். 

ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் நிர்வாகியாக நீண்டகாலம் பொறுப்பில் இருந்தவர், சத்திய நாராயணன். ரசிகர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, ரஜினியுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்வது என மன்றப் பணிகளைத் தீவிரமாகக் கவனித்துவந்தார். இந்நிலையில், மன்றத்துக்குள் தனக்கென லாபியை உருவாக்கிக்கொண்டு செயல்பட்டது என சில குற்றச்சாட்டுகளுக்கும் ஆளானார். தொடர்ந்து உடல் நலிவடைந்துவிடவே, 'உங்கள் உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள்' என சத்திய நாராயணனுக்கு ஓய்வு கொடுத்தார் ரஜினி. 

பல ஆண்டுகளாக மன்றப் பணிகளில் இருந்து ஒதுங்கியிருந்தவர், கடந்த சில வாரங்களாக கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினி மக்கள் மன்ற அலுவலகத்துக்குத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார். ஒருகட்டத்தில், ரஜினியை சந்தித்துப் பேசும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. இந்த சந்திப்புக்குப் பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளர் ராஜு மகாலிங்கத்தை அழைத்த ரஜினி, 'சத்திக்கு மாநிலப் பொறுப்பு கொடுங்க' எனக் கூறிவிட்டார். 'விரைவில் அறிவிப்பு வெளிவர இருக்கிறது' என்கின்றனர், மக்கள் மன்ற நிர்வாகிகள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!