`கத்திரிக்காயை வெட்டற மாதிரி வெட்டிட்டுப் போயிட்டானுங்க!' கச்சநத்தம் பெண்மணி கதறல்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள்மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு 13 பேர் பலியானார்கள். அந்த வலி சற்றும் ஆறாத நிலையில், சிவகங்கை மாவட்டத்தின் கச்சநத்தம் கிராமத்தில், சாதிய பிரச்னை மூன்று மனித உயிர்களைக் காவு வாங்கிவிட்டது.

கச்சநத்தம்

கச்சநத்தம் கிராமத்தில் பட்டியல் இனத்தவர்களின் பகுதியில் நுழைந்த மாற்று சாதியைச் சேர்ந்த சுமார் 50 பேர், அங்கிருந்தவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்தவர்களை வெட்டிச் சாய்த்துள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் துடிதுடிக்கக் கொல்லப்பட்டார். சண்முகநாதன் என்பவர், மதுரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சில மணி நேரத்தில் இறந்துவிட்டார். இந்தத் தாக்குதலில் சிகிச்சைப் பெற்றுவந்த ஆறு பேரில் சந்திரசேகர் என்கிற இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துவிட்டார். இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு, டீ கடையில் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்ததே காரணம் என்றும், அந்தப் பகுதியிலிருந்து அந்த மக்களை வெளியேற்றும் சதியாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தப் பகுதியில் உள்ளவர்களோடு பேசினோம். 

கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி.பாக்கியம், "அந்தக் கும்பல் வந்து என் மருமக பொண்ணை ரெண்டு மிதி மிதிச்சு தள்றானுங்க. உடனே, தெருவுல மத்தவங்களை ஜாக்கிரதையா இருக்கச் சொல்லலாம்னு ஓடிப்போய்ப் பார்த்தா, தெருவே களேபரமாயிருக்கு. தூங்கிட்டிருந்த பசங்களைக் கத்திரிக்காயை வெட்டற மாதிரி வெட்டிட்டுப் போயிருக்காங்க. ரத்த வெள்ளத்துல கிடக்கிற புள்ளைங்களைப் பார்க்க முடியலே. அன்னிக்கு சாயந்திரத்திலேயே ஏதோ நடக்கப்போவுதுனு போலீஸ்கிட்ட சொன்னேன். அவங்க அதைக் கண்டுக்கவே இல்லே. போலீஸ்காரங்க சரியான நேரத்துல வந்திருந்தா இத்தனை பேரை பலி கொடுத்திருக்க மாட்டோம். அவங்க அலட்சியமும் இதுக்குக் காரணம்" என்று ஆற்றாமையுடன் கொதிக்கிறார்.

கச்சநத்தம்அந்தப் பகுதியின் களச் செயற்பாட்டாளரும், `நவ போதி பண்பாட்டு மையம்' அமைப்பைச் சேர்ந்தவருமான முருகன் கண்ணா, "மிகக் கொடூரமாக நிகழ்த்தப்பட்ட பச்சைப் படுகொலைகள் இவை. இதைக் கண்டித்தும் இதற்கான தீர்வாகவும் எட்டு கோரிக்கைகளை முன்வைக்கிறோம்'' என்கிறார். அவை...

1. கச்சநத்தம் பகுதியில் தொடர்ச்சியான வன்கொடுமைகள் நடத்தப்பட்டு வருகிறன்றன. அதனால், சொல்ல முடியாத துயரங்களை பட்டியல் இன மக்கள் அனுபவித்து வருகின்றனர். எனவே, இந்தப் பகுதியைத் தொடர் வன்கொடுமைப் பகுதியாக அறிவிக்க வேண்டும். 

2. மூன்று பேர் துள்ளத் துடிக்கக் கொலை செய்யப்பட்டிருக்கும் இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்ய வேண்டும். 

3. இந்த வழக்கில் கைதாகும் குற்றவாளிகளுக்கு, வழக்கு விசாரணை முடிவடையும் காலம் வரை ஜாமீன் வழங்கக் கூடாது. ஜாமீன் வழங்கும்பட்சத்தில் சாட்சியங்களைக் கலைப்பதோடு, மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தாக முடியும்.

4. இந்தக் கொடூரத் தாக்குதலுக்குக் காவல்துறை அதிகாரிகளும் உதவியாக இருந்துள்ளனர். அவர்கள்மீது தாமதமின்றி வழக்கு பதிய வேண்டும். 

கச்சநத்தம்

5. இந்த வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றுவது மிக முக்கியமானது. அப்போதுதான் இந்த வழக்கு நியாயமாக நடைபெறும்.

6. இந்த வன்கொடுமைத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு தலா 20 லட்சம் ரூபாயும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும்.

 

 

7. இந்தத் தாக்குதலில் காயம்பட்டு சிகிச்சைப் பெறுபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும். உடல் உறுப்புகள் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு உதவிகளையும் செய்ய வேண்டும்.

8. இந்தப் பகுதி மக்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லையேல், இவர்களுக்குப் பாதுகாப்பான வேறோர் இடத்துக்குப் பட்டாவுடன்கூடிய வீடுகளை அமைத்துத் தர வேண்டும். 

''இவை தற்போதைய அடிப்படைக் கோரிக்கைகள். இவற்றை நிறைவேற்றித் தர அரசு முன் வர வேண்டும்" என்கிறார் முருகன் கண்ணா. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!