வெளியிடப்பட்ட நேரம்: 14:36 (31/05/2018)

கடைசி தொடர்பு:14:36 (31/05/2018)

இயல்புநிலை திரும்பியதால் தூத்துக்குடியில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் - ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்பியுள்ளதால், அறிவித்தபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

சந்தீப் நந்தூரிதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்து 9 நாள்கள் ஆகின்றன. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என அரசாணை வெளியிட்டால்தான் இறந்தவர்களின் உடலைப் பெற்றுக்கொள்வோம் என இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். 

 கடந்த 28-ம் தேதி,  துணை முதல்வர் பன்னீர் செல்வம், காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்த அன்று மாலையே, ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என அரசாணை வெளியிடப்பட்டதுடன், ஆலையும் சீல் வைக்கப்பட்டது. 

மறுநாளில் இருந்து தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப ஆரம்பித்துள்ளது. இருப்பினும், நகரின் முக்கியப் பகுதிகளில் போடப்பட்ட போலீஸ் பாதுகாப்பு  குறைக்கப்படவில்லை.  உயிரிழந்தவர்களின் வீடுகளின் அருகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  

இதனால், தூத்துக்குடியில் நாளை பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டது. மக்கள், வழக்கமாக வெளியில் வந்து செல்ல ஆரம்பித்துவிட்டனர்.  

ஆட்டோ, மினி பேருந்துகள் நகருக்குள் இயங்க ஆரம்பித்துவிட்டன. பேருந்துகளும் நகர்ப்பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கி வருகின்றன. எனவே, முழுமையாக இயல்புநிலை திரும்பியதால், பள்ளிகள் நாளை திட்டமிட்டபடி திறக்கப்படும். நகருக்குள் போடப்பட்டுள்ள பாதுகாப்பு படிப்படியாக குறைக்கப்படும். இதனால், மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை" எனத் தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க