நீதிமன்ற உத்தரவின்படி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல் மறுகூறாய்வு தொடக்கம்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த 7 பேரின் உடல்கள் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின் பேரில், ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் தலைமையில் இன்று மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. 

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரின் உடல்களைப் பதப்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரேதப் பரிசோதனை செய்வது குறித்த வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாஸ்கர், டீக்காராமன் ஆகிய அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 7 பேரின் உடல்களை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும். ஏற்கெனவே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட 7 பேருக்கு மறு உடற்கூறாய்வு நடத்த வேண்டும்.

உடற்கூறாய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும். 3 மருத்துவர்கள் அடங்கிய குழு உடற்கூறாய்வு மேற்கொள்ள வேண்டும். எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு மருத்துவர் கட்டாயம் இருக்க வேண்டும். உடற்கூறாய்வுக்குப் பிறகு, நிலை அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

இந்நிலையில், ஜிப்மர் மருத்துமனையின் தடயவியல் மற்றும் நச்சியல் துறை மருத்துவர் அம்பிகா பிரசாத் பத்ரா இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனை வந்து, அங்குள்ள மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவரது தலைமையில் மருத்துவர்கள், 7 பேரின் உடல்களை மறு பிரேதப் பரிசோதனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதில், கந்தையா, ஸ்னோலின், தமிழரசன், செல்வசேகர், காளியப்பன், சண்முகம், கார்த்திக் ஆகிய 7 பேரின் உடல்கள் மறு உடற்கூறாய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் செல்வசேகர் தடியடியில் உயிரிழந்ததாகவும், காளியப்பன் ரப்பர் குண்டடிப்பட்டு உயிரிழந்ததாகவும் மற்றவர்கள் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளதகாவும் தகவல் வெளியாகியுள்ளது. மறு உடற்கூறாய்வு செய்யப்பட்ட "உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்" என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!