`அவர் ஒரு சாராய ஆலை அதிபர்' - சட்டப்பேரவையில் டி.டி.வி.தினகரனுக்கு எதிராகப் பொங்கிய அமைச்சர்

சாராய ஆலை அதிபருக்கெல்லாம் அரசை விமர்சிக்கும் தகுதியில்லை என்று டி.டி.வி.தினகரனை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார்.

தங்கமணி

சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இன்று நடைபெற்ற கூட்டத் தொடரில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதற்குப் பதிலளித்த அத்துறை அமைச்சர் தங்கமணி, 'தட்கல் திட்டத்தின் மூலம் 10,000 பேருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி மூலம் இயங்கும் நீர் இறைப்பான்கள் அமைக்க எரிசக்தி முகாமை சிறப்பு அமைப்பாகச் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக அறக்கட்டளை நிறுவனங்களில் 5 மெகாவாட் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.  டாஸ்மாக் மேற்பார்வையாளருக்கு ரூ.750 ரூபாயும் விற்பனையாளருக்கு 600 ரூபாயும் உதவி விற்பனையாளருக்கு 500 ரூபாயும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. நாங்கள், ராஜினாமா செய்தால்தான் தி.மு.க-வினர் அவைக்கு வருவார்கள் என்றால் அவர்கள் எப்போதும் அவைக்கு வரமுடியாது. அ.தி.மு.க ஆட்சி கலைந்துவிடும் என்று கனவு கண்டனர். தற்போதும் கனவு காண்கின்றனர்.

மத்திய அரசிடம் தமிழக உரிமைகளை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம். அரசை விமர்சனம் செய்தவதற்கும் ஒரு தகுதி வேண்டும். சாராய ஆலை அதிபர்களுக்கெல்லாம் அந்தத் தகுதியில்லை' என்று தெரிவித்தார். அமைச்சர் தங்கமணியை டாஸ்மாக் அமைச்சர் என்று குறிப்பிட்டு  நேற்று டி.டி.வி.தினகரன் பேசியிருந்தார். இந்தநிலையில், டி.டி.வி.தினகரனை சாராய ஆலை அதிபர் என்று தங்கமணி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!