`பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம்' - சொல்கிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங்

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். 

பெட்ரோல்

கர்நாடகத் தேர்தலுக்குப் பின்னர், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சம் தொட்டு வருகின்றன. தொடர்ந்து 16 நாள்களாக விலை ஏற்றம் செய்யப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை நேற்று ஒரு பைசா குறைக்கப்பட்டது. ஒரு பைசா விலைக் குறைப்பு நாடு முழுவதும் பெரிய அளவில் எதிர்ப்பலைகளைச் சந்தித்தது. இதுகுறித்து விளக்கமளித்துப் பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஒரு நாள் இரவில் விலைக்குறைப்பு நடவடிக்கையை எடுக்க முடியாது. அதற்கான நீண்டகாலத் தீர்வை நோக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் அவற்றின் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்து கேரள அரசு அறிவித்துள்ளது. இந்த விலைக்குறைப்பு நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது.  

இந்தநிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்குப் பதிலளித்த ராஜ்நாத் சிங்,``சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இருப்பினும், அதனால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படவில்லை. விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!