``ரோடு போட பிளாஸ்டிக் தாங்க... காசு தர்றோம்!” - கரூர் மாவட்ட நிர்வாகத்தின் `வாவ்' புராஜெக்ட்

இதற்கு பிளாஸ்டிக்குகளை கரூர் மாவட்டம் முழுக்க உள்ள சுயஉதவிக்குழு பெண்கள் சேகரித்து வந்து, அந்தந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஆணையர், செயல் அலுவலர் மற்றும் ஊராட்சிச் செயலர்களை தொடர்பு கொண்டு வழங்கலாம் உரிய விலை வைத்து எடுத்துக் கொள்வோம்

``ரோடு போட பிளாஸ்டிக் தாங்க... காசு தர்றோம்!” - கரூர் மாவட்ட நிர்வாகத்தின் `வாவ்' புராஜெக்ட்

                
 பிளாஸ்டிக் சாலை

இன்றைக்குச் சுற்றுச்சூழலுக்குச் சிக்கலாகவும், நிலத்தடி நீருக்கு எமனாகவும் மாறி இருக்கும் விஷயம் உலகம் முழுக்க எட்டுத்திக்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிளாஸ்டிக்குகள்தாம். `பயன்படுத்த எளிதாக உள்ளது' என்று ஆரம்பித்த அதன் பயன்பாடு குக்கிராமம் வரை நீள, இன்று அந்தப் பிளாஸ்டிக்குகளே மனிதர்களுக்கு எமனாக மாறிக்கொண்டிருக்கிறது. `எப்படி பிளாஸ்டிக்குகளை ஒழிப்பது?' என்று தெரியாமல் அரசே மண்டையைக் குடைந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், பிளாஸ்டிக்குகளை ஒழிக்கும் பொருட்டு அதைக்கொண்டு புதிய தொழில்நுட்ப முறையில் சாலைகள் அமைத்து, பிளாஸ்டிக்குகளை ஒழிக்க நல்ல வழியை ஏற்படுத்தியிருக்கிறது கரூர் மாவட்ட நிர்வாகம். இது இந்தியாவிலே முதல் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.


 பிளாஸ்டிக் சாலை

புதிய ஈரச் செயல்முறை (CMR Bitplast - Wet Process) தொழில் நுட்பத்தில் பிளாஸ்டிக் கழிவு தார்ச்சாலைகள் :

இந்தியாவிலேயே முதல் முறையாகக் காப்புரிமை பெறப்பட்ட CMR Bitplast - Wet Process (ஈரச் செயல்முறை) பிளாஸ்டிக் தார்ச்சாலைகள் அமைப்பதற்கு புதுடில்லியில் உள்ள இந்தியச் சாலை கூட்டமைப்பின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை என்பது நமது நாட்டில் மெட்ரோ, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகத்திறனுக்குச் சவாலாக உள்ளது. உபயோகப்படுத்தப்பட்ட பல லட்சக்கணக்கான மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுவது மட்டுமல்லாமல், நாள்தோறும் பிளாஸ்டிக் கழிவுகளின் வரத்து அதிகரித்துக்கொண்டிருப்பதும், அவற்றில் 5 சதவிகித அளவு கூட மறுசுழற்சி செய்யப்படுவதில்லை என்பதும் மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தி.


 Plastic road

இந்தச் சூழலில்தான், `சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும்; பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலுமாக மறுபிறப்பின்றி அழிக்கும் வகையில் `ஈரச் செயல்முறை' என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம் பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கலாம்' எனக் கரூர் மாவட்ட நிர்வாகம் நிரூபித்துள்ளது. கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மூன்று சாலைகளை இந்த பிட்பிளாஸ்ட் முறையில் அமைத்துள்ளார்கள். புதிய CMR Bitplast - Wet Process தொழில்நுட்பத்தில் பிளாஸ்டிக் கழிவு தார்ச்சாலைகள் அமைப்பதில் தமிழகம்தான் இந்தியாவிலேயே முன்னோடி. கரூர் மாவட்டத்தில் உள்ள காதப்பாறை ஊராட்சியில் NH 7 சாலையிலிருந்து கவுண்டாயூர் வழி கொங்குப் பள்ளி வரையில் 29.35 லட்சம் மதிப்பில் இரு சாலைகள் அமைத்துள்ளார்கள். அதேபோல், பத்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள குறிக்காரன்வலசு முதல் கட்டுக்காட்டூர் வரை இந்த பிட் பிளாஸ்ட் முறையில் தார்ச்சாலைகளை கரூர் மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது.

 அன்பழகன்இதுபற்றி, கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகனிடம் பேசினோம். ``கரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக்குகள் எங்கும் நிறைந்து சுற்றுச்சூழலுக்குப் பிரச்னையை ஏற்படுத்திக்கொண்டிருந்தன. `பிளாஸ்டிக்குகளை எப்படி ஒழிப்பது?' என்று அதிகாரிகளுடன் ஆலோசித்துக்கொண்டிருந்தபோதுதான், இந்த பிட் பிளாஸ்ட் முறை பற்றி கேள்விப்பட்டோம். பிளாஸ்டிக்கையும் ஒழிக்க முடியும், அந்த பிளாஸ்டிக்குகளை கொண்டு தரமான தார்ச்சாலைகளையும் அமைக்க முடியும்ன்னு தெரிய வந்துச்சு. மேட்டூரைச் சேர்ந்த வெங்கடசுப்பிரமணியன் என்பவர் இந்த பிட் பிளாஸ்ட்-வெட்பிராசஸ் மூலம் பிளாஸ்டிக்குகளைக் கொண்டு தார்ச்சாலை அமைக்கும் முறையைக் கண்டறிந்துள்ளதை அறிந்தோம். இப்போதைக்கு மூன்று சாலைகளை அமைத்திருக்கிறோம். இந்த முறையில் கரூர் மாவட்டத்தில் அனைத்துச் சாலைகளையும் அமைக்கவிருக்கிறோம். இதற்கு பிளாஸ்டிக்குகளை கரூர் மாவட்டம் முழுக்க உள்ள சுயஉதவிக்குழு பெண்கள் சேகரித்து வந்து, அந்தந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஆணையர், செயல் அலுவலர் மற்றும் ஊராட்சிச் செயலர்களைத் தொடர்புகொண்டு வழங்கலாம் உரிய விலை வைத்து எடுத்துக்கொள்வோம். இதன்மூலம், இந்தியாவிலேயே முதன்முறையாகக் கரூர் மாவட்டம் பிளாஸ்டிக்குகள் இல்லாத பசுமை மாவட்டமாக விரைவில் மாற்றப்படும்" என்றார்.


 வெங்கட சுப்பிரமணியன்இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த மேட்டூரைச் சேர்ந்த வெங்கடசுப்பிரமணியனிடம் பேசினோம்.
``பிளாஸ்டிக்களை ஒழிக்க வேண்டும் என்ற முனைப்பில் மூன்று வருடங்களாக இரவுப் பகலாக முயன்று கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த CMR Bitplast - Wet Process முறையில் பிளாஸ்டிக்கைக் கொண்டு தார்ச்சாலை அமைக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தேன். `ஈரச் செயல்முறை' தொழில் நுட்பத்தின் மூலம் பல பிளாஸ்டிக் தார்ச்சாலைகள் தமிழ்நாடு மற்றும் ஆந்திர அரசு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் திருச்சி தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தின் வழிகாட்டுதலின் படி வெற்றிகரமாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த முறையானது, பிளாஸ்டிக் கழிவுகளை ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் இயற்கை வேளாண் சார்ந்த பாலிமரைஸ் செய்யப்பட்ட கிரியாயூக்கி மற்றும் சிறிதளவு தாரைச் சேர்த்து உருக்கி,11 கிலோ எடையுள்ள பிட்பிளாஸ்ட்; மாத்திரைகளாக வழங்கி வருகிறது. பிட்பிளாஸ்ட் மாத்திரைகளைச் சூடேற்றப்பட்ட தார் மற்றும் ஜல்லிகளுடன் சேர்த்து பிளாஸ்டிக் தார்ச்சாலை பணிகளை வழக்கம் போல் எளிதாகச் செய்து முடிக்கலாம். இந்தக் கண்டுபிடிப்புக் காப்புரிமை செய்யப்பட்டு உலகளாவிய பாராட்டைப் பெற்றுக்கொண்டிருக்கிறது. 


 CMR Biplast - Wet Process

 

இந்த CMR Biplast - Wet Process தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களில் பிரதம மந்திரி கிராமப்புறச் சாலைகள் (PMGSY) மற்றும் மாநில கிராமப்புறச் சாலைகள் திட்டத்தின் கீழ் சோதனை முறையில் 21 சாலைகள் அமைக்கப்படவுள்ளன. மேலும், பிரதம மந்திரி கிராமப்புறச் சாலைகள் திட்டம் - தேசிய கிராமப்புறச் சாலைகள் வளர்ச்சி முகமை (NRRDA) என்ற இரு அமைப்புகளால் CMR Bitplast - Wet Process பிளாஸ்டிக் தார்ச்சாலைகள் அமைக்க மொத்தம் 32 கிலோமீட்டர் தொலைவுக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள தேசியப் பொறியியல் தொழில் நுட்பக் கழகத்தால்(NIT) நடத்தப்பட்ட செயல்திறன் ஆய்வில் உலர்முறை பிளாஸ்டிக் சாலைகளை விட, ஈரச்செயல் முறை சாலைகள் தொழில்நுட்பத்தில் மிகச் சிறந்தது என்று சான்றளிக்கப்பட்டுள்ளது. CMR Bitplast -Wet Process- சமூகப் பொருளாதார நன்மைகள் பிளாஸ்டிக் கழிவுகளை சுயஉதவிக் குழுக்களிடமிருந்து டன்னிற்கு ரூ.10,000 - 30,000 வரை CMR Bitplast நிறுவனம் வாங்குவதால்,அவர்களுடைய வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்படுகிறது

வேளாண் கிரியாயூக்கி - Stabilizer ஐ விவசாயிகளிடமிருந்தும் வியாபாரிகளிடமிருந்தும் டன்னிற்கு ரூ.60,000 - 90,000 வரை CMR Bitplast நிறுவனம் வாங்குவதால்,விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்படுகிறது. இதைப் பயிரிடுவதன் மூலம் தரிசு நில மேம்பாடு மற்றும் காடுவளர்ப்புச் சாத்தியப்படுகிறது. மேலும்,13 சதவிகிதம் தார் இறக்குமதியைக் குறைப்பதன் மூலம் அந்நியச் செலாவணி மிச்சப்படுத்தப்படுகிறது பிளாஸ்டிக் கழிவுகளை தார்ச்சாலைகளில் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் பொது சுகாதாரம் ஆகியவை உறுதிப்படுத்தப்படுகிறது. 


CMR Biplast - Wet Process

800 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கிராமப்புறச் சாலைகளிலும் 3200 கிலோ வரையிலான பிளாஸ்டிக் கழிவுகளை மாநில நெடுஞ்சாலைகளிலும் இப்புதியத் தொழில்நுட்பத்தின் மூலம் எளிதாகப் பயன்படுத்தலாம். இத்தொழில்நுட்பம் எல்லாவிதமான தட்பவெட்ப நிலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது. இப்புதிய தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் பிளாஸ்டிக் கழிவு தார்ச்சாலைகள் மிகவும் உறுதியுடனும், இருமடங்கு கூடுதலாக, நீண்ட காலம் உழைக்கக் கூடியதாகவும், கனமழை பெய்தாலும் தாங்கக் கூடிய வகையிலும் இருக்கும். மற்ற சாலைகள் 3 வருடங்கள் இருந்தால், இந்த பிட் பிளாட் முறையிலான சாலை 6 வருடங்கள் தாங்கும். இந்த முறையைக் கேள்விப்பட்ட குவைத்,ஆஸ்திரேலியா,சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இந்த புரோபோசலை கேட்டிருக்கிறார்கள்" என்றார் மகிழ்ச்சியோடு.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!