"என் பலவீனத்தை வெளிப்படையாகச் சொன்னதால் வெற்றி கிடைச்சுது!" 'சிறந்த சட்ட மாணவி' பார்கவி | Interview with bhargavi kannan who has been awarded best law student of india

வெளியிடப்பட்ட நேரம்: 17:59 (31/05/2018)

கடைசி தொடர்பு:17:59 (31/05/2018)

"என் பலவீனத்தை வெளிப்படையாகச் சொன்னதால் வெற்றி கிடைச்சுது!" 'சிறந்த சட்ட மாணவி' பார்கவி

`சார்க்' அமைப்பு நடத்திய `மூட் கோர்ட்’ (Moot Court) போட்டியில், இந்தியாவின் சிறந்த சட்ட மாணவியாகச் சென்னையைச் சேர்ந்த பார்கவி கண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சட்ட மாணவி

``உங்களின் பலவீனம் என்ன?'' 

``நான் எளிதாகப் பதற்றம் அடைந்துவிடுவேன். இதோ, இப்போது இந்த இன்டர்வியூவை நல்லபடியாக முடிக்க வேண்டும் என்ற பதற்றம் இருக்கிறது. ஆனால், அது என்னைப் பாதிக்காத அளவுக்குக் கட்டுப்படுத்திக்கொள்ள முயல்கிறேன். இதுதான் என் பலவீனம்!” - பல ஜாம்பவான் வழக்கறிஞர்கள் எதிரில் அமர்ந்திருக்க, சென்னையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி பார்கவி கண்ணன், தெளிவாகப் பதில் சொல்கிறார்.

``நீங்கள் சட்டம் படித்து முடித்தபின் என்னவாக நினைக்கிறீர்கள்?”

``நான் சட்டக் கல்லூரி பேராசிரியராக விரும்புகிறேன். மாற்றுத்திறனாளிகளுக்குச் சட்டம் கற்றுக்கொடுக்கவும் விரும்புகிறேன். எங்கள் வகுப்பில் பார்வையற்ற மாணவர் ஒருவர் இருக்கிறார். வகுப்பில் கற்றுக்கொடுப்பதை தவிர, நிறைய படிக்கவேண்டியிருக்கும். அந்த விஷயத்தில் அந்த மாணவருக்கு உதவ, நண்பர்கள் ஒரு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்தோம். சட்ட மாணவிநாங்கள் படிக்கவேண்டியதை ரிகார்டு செய்து, வாட்ஸ்அப் குரூப்பில் அனுப்புவோம். இது அவருக்கு மிகவும் உதவியாக இருந்தது. அதனால், மற்றவர்களுக்குப் புரியும் வகையில் சொல்லிக்கொடுப்பது எனக்கு வருகிறது எனத் தெரிந்துகொண்டேன். சின்ன வயசிலிருந்தே எனக்கு டீச்சிங் பிடிக்கும். அது என் பலம். அதேசமயம், சட்டம் படிக்கவும் விருப்பம். அதனால், ஒரு பேராசிரியையாக மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதும், உடல்நலம் குன்றியவர்களுக்கு உதவி செய்வதும் என் லட்சியம்” என உறுதியான குரலில் சொல்கிறார் பார்கவி கண்ணன்.

இதுபோன்ற பல கேள்விகளுக்குச் சொன்ன பதில்களே, `சார்க்' ( SAARC) அமைப்பு நடத்திய `மூட் கோர்ட்’ (Moot Court) போட்டியில், இந்தியாவின் சிறந்த சட்ட மாணவியாக பார்கவியைத் தேர்ந்தெடுத்துள்ளது. இதன்மூலம் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில், உயர்கல்வி படிக்க 33 லட்சம் ஸ்காலர்ஷீப் வென்றுள்ளார். வெற்றி உற்சாகத்தில் இருந்த பார்கவியிடம் பேசினேன்.

``என் சொந்த ஊர் சென்னை. அம்மா, ஹோம் மேக்கர். அப்பா, தனியார் நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக இருக்கிறார். எனக்கும் சட்டம் படிக்கும் ஆர்வம். தமிழ்நாடு சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிச்சுட்டிருக்கிறேன். `மூட் கோர்ட்'  போட்டி என்பது, ஒவ்வொரு கல்லூரியிலும் அடிக்கடி நடக்கும் போட்டி. அதாவது, ஒரு டீமுக்கு ஒரு வழக்கு மாதிரியைக் கொடுத்து, அதுபற்றி சட்ட ரீதியாக வாதங்கள் நடத்த வேண்டும். எந்த அணி நன்றாக விவாதம் நடத்துகிறதோ அவர்களுக்கு வெற்றி கிடைக்கும். இதுதான் உலகம் முழுவதும் இருக்கும் `மூட் கோர்ட்' போட்டியின் அடிப்படை. கிட்டத்தட்ட நடமாடும் நீதிமன்றம்போல. 

இப்படிக் கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் பல போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் படுதோல்வி அடைஞ்சிருக்கேன். ஃபாலோ மிஸ்ஸாகும், உதாரணங்கள் காட்டி பேசத் தெரியாமல் முழிப்பேன். இப்படிச் சில குறைகள் இருந்தன. அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிசெய்துகொண்டு, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். இந்தப் போட்டிகளில் நல்ல அனுபவங்களும் நிறைய வெற்றிகளும் கிடைக்க ஆரம்பித்தன” எனத் தன் வெற்றிக் கதையைப் பகிர்கிறார் பார்கவி.

சட்ட மாணவி

பெற்றோருடன் பார்கவி

`` `சார்க்' மாநாட்டில் நடந்த போட்டியில் நான் உட்பட எங்கள் கல்லூரியில் படிக்கும் ஜூனியர் மாணவிகளான பகவதி வென்னிமலை, ஐஸ்வர்யா லட்சுமி, சாமீனா செயத் ஆகியோர் கலந்துகொண்டோம். அவங்க ஜூனியரா இருந்தாலும் உண்மையிலேயே சிஸ்டர் மாதிரி. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி பண்ணிக்கிட்டோம். இந்த அவார்டை நான் ஜெயிச்சுட்டேன்னு தெரிஞ்சதும், என் அப்பா போனிலேயே அழுதுட்டார். அவருக்கு நிகராக, என் வெற்றியைக் கொண்டாடினது இந்தச் சகோதரிகள்தாம். இதுக்கு முன்னாடி, வியன்னாவில் நடந்த போட்டியில் கலந்துக்கிட்டு ஜெயிச்சிருக்கேன். இதுவரை 16 மூட் போட்டிகளில் கலந்துக்கிட்டிருக்கேன். ஏதோ பெருமைக்காகச் சொல்றேன்னு நினைக்காதீங்க. நான் ஒரு மூட் போட்டியில் கலந்துக்கிறேன்னு தெரிஞ்சால், மத்தவங்க அந்தப் போட்டியில் கலந்துக்க ரொம்பவே யோசிப்பாங்க!” எனச் சிரிப்புடன் காலரைத் தூக்கிவிட்டுக்கொல்கிறார் பார்கவி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்