வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (31/05/2018)

கடைசி தொடர்பு:18:04 (31/05/2018)

`ஆணையம் அமைக்காமல் வெளிநாடு சென்றுவிட்டார் மோடி!' குறை தீர்க்கும் கூட்டத்தில் பொங்கிய விவசாயிகள்

Farmers condemned

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்காமல் வெளிநாடு சென்ற பிரதமர் மோடிக்கு நாகை விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

விவசாயிகள்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி இன்றைய தேதிக்குள் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்திருந்தது. ஆனால், பிரதமர் மோடி திடீரென இந்தோனேஷியா பயணம் சென்றிருப்பதால் ஆணையம் அமைக்க முடியாமல் காலதாமதம் செய்யப்படுகிறது. இதற்கு விவசாயs சங்கத்தினர் இக்கூட்டத்தில் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.

நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், ''வேளாண்மைத்துறை சார்பில் சிறு, குறு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் இரவை குழாய்களில் (பைப்) பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகk குற்றம்சாட்டினர். அதாவது, 3 இன்ச் குழாய்களுக்குப் பதிலாக 2 இன்ச் குழாய்கள் வழங்கப்பட்டதாகவும் அதனால் மின் மோட்டார்களில் பழுது ஏற்பட்டு விவசாயிகளுக்குப் பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டினர். இன்றைக்குள் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்துக்கு உறுதி அளித்திருந்த நிலையில், பிரதமர் மோடி வெளிநாடு சென்றதால் ஆணையம் அமைக்க முடியாமல் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழக விவசாயிகள் நலனில் பிரதமர் மோடிக்கும், தமிழக முதல்வருக்கும் சிறிதும் அக்கறை இல்லை'' என்று கண்டனம் தெரிவித்தனர் 

Farmers condemnedஇது பற்றி காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க பொதுச் செயலாளர் தனபாலனிடம் பேசியபோது, ''உச்ச நீதிமன்றம் ஜூன் 1-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட வேண்டும், அதற்கான அரசாணை வெளியிடப்பட வேண்டும் என்று தெளிவாக உத்தரவிட்டுள்ளது.  ஆனால், மத்திய அமைச்சர் வி.பி.சிங், வெளிநாடு சென்றிருக்கும் பிரதமர் மோடிக்காக அமைச்சரவை காத்திருப்பதாகவும் அவர் வந்த பிறகு, அரசாணை வெளியிடப்படும் என்றும் சொல்கிறார்.  ஜூன் 12-ம் தேதிக்குள் கர்நாடக அரசு காவிரியில் 11.4 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும். இந்தத் தண்ணீர் வந்தால்தான் டெல்டாவில் குறுவை சாகுபடி செய்வது சாத்தியம். ஆனால், இத்தகைய பணிகள் நடைபெறாமல் இருக்கவும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமலும் மத்திய அரசு செயல்படுவது வருத்தமளிக்கிறது. ஜனநாயகத்தில் இந்தியாவின் மிக உயர்ந்தது உச்ச நீதிமன்றம்தான். அதன் உத்தரவை மத்திய அரசு மதிக்காமல் காலில் போட்டு மிதிப்பது சரிதானா’’ என்று வேதனையுடன் முடித்தார்.