ஆஃப்கானிஸ்தான் அணிக்கு பி.சி.சி.ஐ வழங்கிய புதிய வாய்ப்பு!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சர்வதேச கிரிக்கெட் அணிகள், ஆஃப்கானிஸ்தான் அணியுடன் பயிற்சிப் போட்டிகளில் விளையாட இருக்கின்றன. 

Photo Credit: Twitter/@ACBofficials

ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. அந்த அணி, தனது முதல் டெஸ்டில் இந்திய அணியுடன் மோதுகிறது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வரும் 14-ம் தேதி அந்தப் போட்டி தொடங்குகிறது. இந்தநிலையில், ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை ஏற்று இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் (பொறுப்பு) அமிதாப் சௌத்ரி அந்நாட்டுக்குச் சென்றுள்ளார். அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் அடிஃப் மாஷல் உடன் இணைந்து கூட்டாகச் செய்தியாளர்களிடம் பேசினார்.  

அப்போது பேசிய அமிதாப் சௌத்ரி, ``ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை ஏற்று காபூல் வந்திருப்பது மிகப்பெரிய கௌரவம். அதேபோல், அந்த அணியின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது பி.சி.சி.ஐ-க்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வாய்ப்பைத் தவறவிட பி.சி.சி.ஐ விரும்பவில்லை. அமைதியை வலியுறுத்தும் விதமாக இருநாடுகள் இடையேயான உறவை கிரிக்கெட் விளையாட்டு மேலும் வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஐ.பி.எல் தொடரில் ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதனால், அவர்களுக்கு இந்தியாவில் ரசிகர்கள் இருக்கின்றனர். வரும் நாள்களில் ஆஃப்கானிஸ்தான் வீரர்களுக்கு ரசிகர்கள் அதிகரிப்பர். அதேபோல், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு சர்வதேச அளவில் வாய்ப்பு வழங்கும் பொருட்டு, இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சர்வதேச கிரிக்கெட் அணிகள், ஆஃப்கானிஸ்தான் அணியுடன் பயிற்சிப் போட்டிகளில் விளையாட இருக்கின்றன’’ என்று தெரிவித்தார்.  

ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் அடிப் மாஷல் பேசுகையில், ``தற்போது ஐ.சி.சி-யின் முழுநேர உறுப்பினர் அந்தஸ்து எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதேபோல், பி.சி.சி.ஐ-யுடன் நல்ல உறவையும் நட்பையும் நாங்கள் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பி.சி.சி.ஐ-யின் உதவியால் ஆஃப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாட்டை பிரபலப்படுத்தி, திறமையான வீரர்களை உருவாக்குவோம்’’ என்றார். அதேபோல், கிரேட்டர் நொய்டா தவிர, டேராடூன் மைதானத்தையும் ஆஃப்கானிஸ்தான் அணி சொந்த மைதானமாகப் பயன்படுத்திக்கொள்ள பி.சி.சி.ஐ அனுமதி அளித்தது. அதற்கும் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவித்தது. டேராடூன் மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!