வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (31/05/2018)

கடைசி தொடர்பு:19:18 (31/05/2018)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரில் முதல் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரில் 7 பேரின் உடல்கள் மறுகூறாய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் முதலாவதாக, சண்முகம் என்பவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

சண்முகம் என்பவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரின் உடல்களைப் பதப்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரேதப் பரிசோதனை செய்வது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு விசாரணையில், "துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த
7 பேரின் உடல்களை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும்.

உடற்கூறாய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும். 3 மருத்துவர்கள் அடங்கிய குழு உடற்கூறாய்வு மேற்கொள்ள வேண்டும். எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு மருத்துவர், மாவட்டத்தின் நீதிபதி கட்டாயம் இருக்க வேண்டும். உடற்கூறாய்வுக்குப் பிறகு, நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" எனக் கூறி வழக்கை ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், ஜிப்மர் மருத்துமனையின் தடயவியல் மற்றும் நச்சியல் துறை மருத்துவர் அம்பிகா பிரசாத் பத்ரா, தூத்துக்குடி ஜே.எம்-1 கோர்ட் நீதிபதி அண்ணாமலை மற்றும் அரசு மருத்துவர்கள் 2 பேர் முன்னிலையில் மறு உடற்கூறாய்வு இன்று காலை 11.35 மணிக்கு தொடங்கப்பட்டது. 

இதில், முதலில் மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது உடல் மறு உடற்கூறாய்வு செய்து சரியாக மாலை 5.28-க்கு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.  மறு உடற்கூராய்வுக்கு முன்னர், சண்முகம் உடலில் 18 இடங்களில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. உடல் ஒப்படைப்புக்கு முன்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டது.

உடல் ஒப்படைப்பை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. அடுத்ததாக, தமிழரசன் மற்றும் செல்வசேகர் ஆகியோரின் உடல் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டு வருகிறது. பின்னர், கந்தையா, ஸ்னோலின், காளியப்பன், கார்த்திக் ஆகிய 4 பேரின் உடல்களும் மறு உடற்கூறாய்வு செய்யப்படும் என மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.

"இரவு வரையிலும் மீதமுள்ளவர்களின் உடல்கள் மறுஉடற்கூறாய்வு செய்ய சிறப்பு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. மறு உடற்கூராய்வு செய்யப்பட்ட உடல்கள்  குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுவிடும்" என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க