வெளியிடப்பட்ட நேரம்: 21:05 (31/05/2018)

கடைசி தொடர்பு:21:05 (31/05/2018)

``கலெக்டர் உத்தரவுப்படிதான் எல்லாம் நடக்கும்... நாங்க பலிகடா!’’ - குமுறும் தாசில்தார்

``கெடக்குறது கெடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில வையினு சொல்ற மாதிரி எல்லா கெட்டதுக்கும் எங்களை மாதிரி அப்பாவிகளைத்தான் முதல் பலிகடாவாக்கிடுவாங்க. உண்மையில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணி போன்ற விஷயங்களுக்கான அனுமதிக்காகத்தான் எங்ககிட்ட வருவாங்க...

``தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குக் காரணம், துணை தாசில்தார்தான்!'' என்று அரசு தரப்பில் இரண்டு பேரைக் கைகாட்டியிருக்கும் சூழலில், சமூக வலைதளங்களில் துணை தாசில்தாரை மையமாகவைத்து மீம்களைத் தெறிக்கவிடுகிறார்கள் நெட்டிசன்ஸ். `உண்மையில் துணை தாசில்தாருக்கு அந்த அளவுக்குப் பவர் உண்டா..?' எனத் தென்மாவட்டத்தில் தற்போது பணியில் இருக்கும் தாசில்தார் ஒருவரிடம் கேட்டோம். மனிதர், பொங்கித் தீர்த்துவிட்டார்.

தாசில்தார் - கலெக்டர் உத்தரவு

`` `கெடக்கிறது கெடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில வை'னு சொல்ற மாதிரி, எல்லா கெட்டதுக்கும் எங்களை மாதிரி அப்பாவிங்களைத்தான் முதல் பலிகடாவாக்கிடுவாங்க. உண்மையில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணி போன்ற விஷயங்களுக்கான அனுமதிக்காகத்தான் எங்ககிட்ட வருவாங்க. அதெல்லாம் எழுத்துபூர்வமான டாக்குமென்டாக்கப்படணும்கிறதுக்காகத்தான். ஒரு குரூப் போராட்டம் பண்ணப்போறாங்கன்னா, முதல்ல டெபுடி தாசில்தார்கிட்டதான் எழுத்துபூர்வமா தெரிவிக்கணும். எங்களை `எக்ஸிகியூட்டிவ் மேஜிஸ்ட்ரேட்'னு சொல்வாங்க. நீதித்துறையில இருக்கிறவங்களை `ஜுடிஷியல் மேஜிஸ்ட்ரேட்'னு சொல்வாங்க. எங்களால  நிர்வாகம் சார்ந்த முடிவுகள் மட்டுமே எடுக்க முடியும். `செக்டார் மேஜிஸ்ட்ரேட்'னும் எங்களைச் சொல்வாங்க.

கலெக்டர் உத்தரவு இல்லாம எங்களால இம்மியளவும் எங்கேயும் நகர முடியாது. அவர்கிட்ட சொல்லாம எதையும் தன்னிச்சையா செய்ய முடியாது. அதுலயும் சட்டம் - ஒழுங்குப் பிரச்னைக்கு முழுக்க முழுக்க கலெக்டர் உத்தரவுபடிதான் நாங்க எல்லோரும் வேலைசெய்யணும். துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவுக்கெல்லாம் நிஜமாவே எங்களுக்குப் பவர் இல்லை. இங்கேனு இல்லை. இந்தியா முழுமைக்கும் கலெக்டர் எனப்படுகிற டிவிஷனல் மாஜிஸ்டிரேட் உத்தரவுப்படித்தான் இது நடக்கும்.

ஸ்டெர்லைட் போராட்டத்துல துப்பாக்கிச்சூடு நடக்குதுனா, இப்படி துணை தாசில்தார்கள்கிட்ட  எழுத்து மூலமா ஆர்டர் வாங்கிட்டுலாம் ஷூட்டிங் பண்ணியிருக்க வாய்ப்பேயில்லை. இதுதான் நடைமுறை சாத்தியம். கரெக்‌ஷன் பார்த்து கம்ப்யூட்டர்ல அடிச்சு பிரின்ட் அவுட் எடுக்கிறதுக்கே  ரெண்டு மணி நேரத்துக்கு மேலே ஆகும். அங்கே மின்னல் வேகத்துல பிரச்னை நடந்துக்கிட்டிருக்கும்போது இப்படி நாங்க உத்தரவிட வாய்ப்பே இல்லை. பொதுவா  கலெக்டர்கிட்ட முதல்ல பர்மிஷன் வாங்கிட்டு, எல்லாமே பக்காவா முடிச்சுட்டு அப்புறமா  டிராஃப்ட் ரெடி பண்ணி கையெழுத்து வாங்குவாங்க.

துப்பாக்கிச் சூடு, தடியடி

தூத்துக்குடி விஷயத்துல அதுவும் நடக்கலை. அப்பாவியான எங்களை மாட்டிவிட்டுட்டாங்க. கேட்டா `செக்டார் மேஜிஸ்ட்ரேட்' துணை தாசில்தார்னு `லா பாயின்ட்'டை பொய்யா பரப்பிவிடுறாங்க. இவ்வளவு பெரிய மேட்டரைத் தன்னிச்சையா இந்திய வரலாற்றுல துணை தாசில்தார் யாரும் பண்ணினதா சரித்திரமே இல்லை. அதுலேயே தெரியலையா என்ன நடந்திருக்கும்னு?

ஊடகங்கள்ல எஃப்.ஐ.ஆர் காப்பியைக் காட்டி `துணை தாசில்தார்கள் உத்தரவின் பேரில்தான் நடந்தது' எனக் காட்டும்போது தமிழ்நாட்டுல வருவாய்த் துறையில வேலைபார்க்கிற என்னைப்போல தாசில்தார்கள் எல்லோருமே சிரித்திருப்போம். கலெக்டரோட நாலேஜ் இல்லாம ஒரு துரும்பையும் அசைக்க முடியாதுனு நீங்களாச்சும் எழுதுங்க சார். ஒருவேளை கலெக்டர் விடுப்புல இருந்தார்னா, மாவட்ட வருவாய் அலுவலரான டி.ஆர்.ஓ-வுக்கு அந்தப் பவர் உண்டு. அதுவும் செல்போன்கள் யுகத்துல கலெக்டர்கள் உத்தரவுபடிதான் எல்லாமே நடக்கும்.

இந்த இடத்துல ஒரு விஷயத்தைச் சொல்லிக்கிறேன். கலெக்டருக்கே இல்லாத சில அதிகாரங்கள் டி.ஆர்.ஓ-வுக்கு இருக்கு. அதாவது நிலம் சார்ந்த சில பிரச்னைகளை மட்டும் டி.ஆர்.ஓ-தான் தீர்த்துவைப்பார். கலெக்டர் பார்வைக்குப் போகணும்கிற அவசியமே இல்லை. டி.ஆர்.ஓ-வுக்கு அந்தப் பவர் உண்டு. உதாரணத்துக்கு, ஒரு இடத்தை `இது என் இடம்!'னு சொல்லி ரெண்டு குரூப் சண்டைபோட்டுக்குறாங்கன்னு வையுங்க. அவங்கவங்களோட பத்திரங்களையும் ஆதாரங்களையும் தாக்கல் செய்யச்சொல்லி தீர்ப்பு சொல்ற அதிகாரம் டி.ஆர்.ஓ-வுக்குத்தான் உண்டு. அந்த விஷயத்துல மட்டும்தான்,  `ஒரு மாவட்டத்துக்கு ஃபைனல் அத்தாரிட்டி டி.ஆர்.ஓ'.

நம்ம அமைப்புல நிலப் பிரச்னைகளுக்கு மக்கள் முதல்ல டெபுடி தாசில்தார்கிட்டதான் வருவாங்க. அதுக்கு மேல்முறையீடு தாசில்தார். அதுக்கும் மேல்முறையீடு ஆர்.டி.ஓ-வுக்கு (ரெவின்யூ டிவிஷனல் ஆபீஸர்). அவருக்கு அப்புறமாத்தான் மேல்முறையீடு டி.ஆர்.ஓ-வுக்கு வரும். அவர்தான் ஒரு மாவட்டத்தோட சுப்ரீம் கோர்ட் மாதிரி. கலெக்டருக்கேகூட சில ஃபைல் போகாது. அவர் அளவுலேயே முடிஞ்சுடும். நிலப் பிரச்னைகளைத் தாண்டி வேற சட்டம்-ஒழுங்குக்கான பவர் வருவாய்த் துறையில யாருக்கும் இல்லை. 

ஒரு ஊருல ரெண்டு தரப்புக்குக் கலவரம்னா, சமாதானக் கூட்டம் நடத்துவோம்கிறதையே கலெக்டருக்குச் சொல்லி அப்டேட் பண்ணிட்டுதான் அந்த இடத்துக்கே போக முடியும். திரும்பவும் சொல்றேன். `செக்டார் மேஜிஸ்ட்ரேட்' என்பது ஒரு மரியாதைக்கான வார்த்தைகள் மட்டுமே'' என்றவர்,  துப்பாக்கிச்சூடு எப்படி நடந்திருக்கும் என அவர் தரப்புப் பார்வையை முன்வைத்தார். 

தடியடி

``வெள்ளைக்காரன் காலத்துல அவங்க கொண்டுவந்த சட்டம்தான் கலவரத்தைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடுலாம். சுதந்திரத்துக்குப் பிறகு அதையெல்லாம் நாம காலாவதியாக்கியிருக்கணும்.  பொதுவா கலவரங்கள்ல தண்ணீர்ப் பீய்ச்சி அடிப்பது, கண்ணீர்ப் புகைக்குண்டு, ரப்பர்குண்டு, கடைசியா தவிர்க்க முடியாத சூழல்ல முட்டிக்குக் கீழே சுடணும் என்பதுதான் அடிப்படை போலீஸ் விதி. இதில் எதையும் பின்பற்றவில்லை என்பதே காவல் துறை அக்கிரமத்தின் உச்சம். முன்னேறிய நாடுகள்லகூட இப்ப துப்பாக்கிச்சூடுலாம் நடத்துறது கிடையாது. நாமதான் அதைப் பிடிச்சுத் தொங்கிக்கிட்டிருக்கோம். அவசரம்னா நள்ளிரவு 1 மணிக்குக்கூட தாசில்தார்கள் கலெக்டருக்குப் போன் பண்ணலாம். லீவில் இருந்தால் மட்டும்தான் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் டி.ஆர்.ஓ-வுக்குக் கால் செய்வோம்.  

தவிர, துப்பாக்கிச்சூடு நடந்த தினத்துக்கு முந்தைய தினமே கலெக்டர், ஆபீஸ்ல இல்லை. சம்பவத்தன்று ஜமாபந்திங்கிற வருவாய் தீர்வாயக் கணக்குகளை செக்பண்ணும் நிகழ்ச்சிக்குக் கோவில்பட்டி தாலுகா ஆபீஸுக்குப் போயிருக்கார். தீர்வாயக் கணக்குகள் என்பது வி.ஏ.ஓ-க்கள் 24 விதமான கணக்குகளைப் பராமரிக்கணும் என்பது விதி. அவர்கள் ஓராண்டாகப் பராமரித்த கணக்குகளை செக் பண்ணும் நிகழ்வதுதான் அது. உண்மையில் தலை போகுற நிகழ்ச்சியில்லை அது.

மாவட்டத்துல இருக்கிற டெபுடி கலெக்டர்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் எட்டுப் பேருகிட்ட ஒவ்வொரு தாலுகாவுல ஜமாபந்தி நடத்துவாங்க. அன்னிக்கு கலெக்டர் தனக்குக் கோவில்பட்டி தாலுகா ஜமாபந்தினு ஒதுங்கிட்டார். அவர் போகாவிட்டாலும் வேற ஒரு டெபுடி கலெக்டரை அனுப்பியிருக்கலாம். இங்கே தூத்துக்குடியில பிரச்னை அதிகமானதும் எஸ்.பி போன் பண்ணியிருக்கார். `நீங்க இங்கே வரக் கூடாது. பிரச்னை ஆகும்போல இருக்கு'னு சொல்லியிருக்கார். அதனால கோவில்பட்டியில இருந்து ஒட்டப்பிடாரம் பி.டி.ஓ ஆபீஸ்ல போய் தங்கியிருக்கார்.

போலீஸ் தடியடி

ஒரு கலெக்டரா அவர் பண்ணியது மிகப்பெரிய தப்பு. 100 நாளைக்கு முன்னாடியே பீஸ் கமிட்டினு 9 பேரைப்  போட்டிருக்காங்க. `நாங்க பேரணியா வந்து மனு கொடுக்கப்போறோம்’னு இவர்கிட்ட போராட்டக் குழுவுல இருந்து முறையா சொல்லியிருக்காங்க. ஆனா, அவருக்கு என்ன அழுத்தமோ ஆரம்பத்துலயிருந்து 144 போட்டு போராட்டக் குழுவுக்குத் தடை பண்றதுலேயே குறியா இருந்தாங்க. அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளை நடத்த இவர் முன்வரலை. ஆர்.டி.ஓ-வை வெச்சேதான் தலையிடாமல் முடிச்சுவைக்க ஏற்பாடுகளை பண்ணியிருக்கார்.

ஒருமுறை சப்கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கார். அது அவ்வளவு திருப்தியா இல்லை. அப்புறமா ஏனோ போராட்டக் குழுவை ரெண்டா பிரிச்சுவிட முயன்றிருக்காங்க. பாத்திமா பாபு என்கிற போராட்டக்குழு அமைப்பாளர்கிட்ட `போராட்டத்தை ஏதாவது ஒரு கிரவுண்டுக்கு மாத்திக்கிடுறோம்'னு சொல்லி எழுதிக் கையெழுத்து மட்டும் வாங்கியிருக்காங்க. ஆனா, போராட்டத்துல ஈடுபட்ட  மக்கள் அந்த அம்மாவையே நீக்கிட்டு போராட்டத்தை அறிவிச்ச விஷயம் கலெக்டருக்கே தெரியலை. அந்த விவரம்லாம் கலெக்டருக்குத் தெரியாமப்போனதே மிகப்பெரிய தப்பு.

ஒருமுறை கலெக்டர் போராட்டக் குழுவில் 20 பேரை நேர்ல வரவழைத்து, கைப்பட எழுத்து மூலமா,  `நாங்க இது இது செஞ்சிட்டிருக்கோம். அடுத்தகட்டமா ஸ்டெர்லைட் விஷயமா இப்படிலாம் நடவடிக்கை எடுப்போம்'னு சும்மா எழுதிக் கொடுத்திருந்தாலே லெட்டரை வாங்கிட்டு வாழ்த்தி மாலை போட்டுட்டு போற அளவுக்குதான் அன்னிக்கு மக்கள் இருந்தாங்க.

கலவரம் - தாசில்தார் உத்தரவு

எனக்குத் தெரிஞ்சு சமூக விரோதிகள்லாம் அங்கே இல்லை. பெண்கள் குடும்பத்தோட வீட்டுலயிருந்து சாப்பாடு தண்ணீர்லாம் எடுத்துட்டு வந்திருந்தாங்க. நூற்றுக்கணக்கான குழந்தைகளோட வந்திருந்தவங்க, `நிச்சயம் கலவரம் ஆகும்கிற எண்ணத்தோடு வந்திருக்க மாட்டாங்க. 3 வயசுலயிருந்து 80 வயசு தாத்தா வரைக்கும் அங்கே இருந்தாங்க. ஒரு கலெக்டரோட கவனக்குறைவு இத்தனை உயிரிழப்புகளுக்குக் காரணமா அமைஞ்சிடுச்சு!'' என்று ஆதங்கப்பட்டவர், கடைசியாகத் துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமான காவல்துறையைப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார் அவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்