`காங்கிரஸுக்கு உள்துறை; மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு நிதித்துறை! - இறுதிவடிவம் பெறும் கர்நாடக அமைச்சரவை

கர்நாடக அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்வது குறித்து காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அமைச்சரவை பேச்சுவார்த்தை


கர்நாடகத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி முதலமைச்சராகப் பதவியேற்றார். துணை முதலமைச்சராகக் காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வரா பதவியேற்ற நிலையில், இரு கட்சிகளிடையே அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. இதனால், முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவியேற்று ஒருவாரம் கடந்த நிலையிலும் அமைச்சரவை பதவியேற்கவில்லை. 

இந்தநிலையில், கர்நாடக அமைச்சரவை பட்டியல் தயாரிப்புப் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாகக் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையில் உடன்பாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதன்படி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு நிதித்துறையும் காங்கிரஸுக்கு உள்துறையும் ஒதுக்கப்பட உள்ளன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து இரு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவிலிருந்து தொலைபேசி வாயிலாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் டேனிஷ் அலி, ``அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு குறித்து இதுவரை 5 கட்டங்களாக ஆலோசனை நடத்தியிருக்கிறோம். இதில், நிதித்துறையை மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் குமாரசாமி மற்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளேன்’ என்று அவர் தெரிவித்தார்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!