`இந்த மனநிலை ஆபத்தானது!’ - ரஜினியைச் சாடும் சீமான் | seeman says that rajinikanth reflects the voice of bjp

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (31/05/2018)

கடைசி தொடர்பு:19:41 (31/05/2018)

`இந்த மனநிலை ஆபத்தானது!’ - ரஜினியைச் சாடும் சீமான்

பாரதிய ஜனதா கட்சியின் திரைமுகமாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் திரைமுகமாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

சீமான்

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ``தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடிய 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஏராளமானோர் குண்டு காயம் பட்டும் போலீஸாரின் தாக்குதலில் எலும்புகள் முறிந்தும் தலை உடைந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இத்தகைய சோகமான ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க ரஜினிகாந்த் வந்தார். ஆனால் வரும்போதே, `நான் தூத்துக்குடிக்குச் சென்றதும் என்னைப் பார்த்து மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்’ என்று சொல்லிவிட்டு வந்தார். இந்த மனநிலையே மிகவும் ஆபத்தானது.

போராட்டத்தில் பாதிக்கப்பட்டு உறவுகளை இழந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் பார்க்க வரும்போது திறந்த ஜீப்பில் நின்று கொண்டு தேர்தலுக்கு ஓட்டுக்கேட்டு வருவதுபோல கையை ஆட்டிக்கொண்டு வந்ததே நாகரிகமற்ற செயல். இத்தகைய மனநிலை கொண்டவர்கள் தலைவராக உருவாவதே இந்தச் சமூகத்துக்கு ஆபத்தானதாக மாறிவிடும். என்னைப் பொறுத்தவரையிலும் அவரைப் போன்றவர்கள் எல்லாம் தலைவராக மாறும்போது எங்களைப் போன்றவர்கள் சமூக விரோதிகளாக இருப்பதே மேலானது என்பதே தனிப்பட்ட கருத்து. 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாள்களாக மக்கள் போராடியிருக்கிறார்கள். ஆனால், அரசு கண்டுகொள்ளவில்லை. இப்போது ஆலையை மூடும் அரசானது, அதற்கான நிலைமை இருக்கும் சூழலில் போராட்டம் நடந்திருக்கும்போதே அதை மூடியிருக்கலாமே. ஒரு முறைகூட மாவட்ட ஆட்சியர் அந்த மக்களைச் சென்று சந்திக்கவே இல்லையே. அதையெல்லாம் கேட்கத் தகுதியற்ற ரஜினிகாந்த், சென்னையிலிருந்து வந்ததும் வராததுமாகப் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாகச் சொல்வது எப்படி?

அவருக்கு மட்டும் சமூக விரோதிகள் ஊடுருவிய விவரம் எப்படித் தெரிந்தது. உயிரிழந்த 13 பேர் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரக்கூடிய 40 பேரில் யாரைச் சமூக விரோதி என்று ரஜினிகாந்த் சொல்கிறார். அரசுக்கே கலவரத்துக்கு காரணமானவர்கள் யார் என்பது தெரியாததால்தான் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறது. ஆனால், ரஜினிகாந்த்துக்கு மட்டும் தெரிந்தது எப்படி. சமூக விரோதி என்பதன் வரைமுறை என்ன என்பது பற்றி அவர் விளக்கம் அளிக்க வேண்டும். 

போராட்டமே கூடாது என்பதும் தவறான மனநிலை. போராட்டமே இருந்திருக்காவிட்டால் நமது நாட்டுக்கு சுதந்திரமே கிடைத்து இருக்காது. நமது வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சமுமே போராட்டமாக இருக்கிறது. உரிமைக்காகப் போராடாமல் எப்படி இருக்க முடியும். ஆனால், ரஜினிகாந்த் பேசுவது யாருடைய குரல்... அவர் பாரதிய ஜனதா கட்சியின் திரைமுகமாகச் செயல்படுகிறார்’’ என்றார்.