ஸ்டெர்லைட் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தைத் தொடர்ந்து பசுமைத் தீர்ப்பாயத்திலும் தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்

ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தைத் தொடர்ந்து தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்திலும் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் புயலைக் கிளப்பிய நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து, தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்திலும், தேசியப் பசுமை தீர்ப்பாயத்திலும் நிலுவையில் இருக்கின்றன. 

இதனால், தமிழக அரசு சார்பில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தமிழக அரசின் வாதத்தைக் கேட்காமல், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக எந்தவோர் உத்தரவையும் பிறப்பிக்க இயலாது. இந்தநிலையில், ஸ்டெர்லைட் வழக்கு நிலுவையில் இருக்கும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்திலும் தமிழக அரசு சார்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு வெளியிட்ட அரசாணை, சட்டத்தின் முன் தாக்குப்பிடிக்காது எனப் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!