கச்சநத்தம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத் தலைவர்!

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில், நேற்று இரவு தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத் தலைவர் எல்.முருகன் விசாரணை மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மக்கள், எங்களை வேறு இடத்துக்கு மாற்றுங்கள். இங்கே குடியிருக்க முடியாது எனச் சொல்லி காலில் விழுந்து கதறி அழுதார்கள். இன்று வரை தெருவிளக்கு இல்லாமல் அந்தக் கிராம மக்கள் இருக்கிறார்கள். வீடுகள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. குடிநீர், சாலை வசதி இல்லாமல் அக்கிராம மக்கள் அவஸ்தையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

கச்சநத்தம்

பின்னர், ஆணைய துணைத் தலைவர் செய்தியாளர்களிடம், "இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளது. அரசு வேலை கிடைப்பதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்யவும், வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்க  காவல்துறைமூலம் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மேலும், பாதிக்கப்பட்ட கச்சநத்தம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகத்தை அறிவுறுத்தியுள்ளோம். தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகும் கச்சநத்தம், ஆலடிநத்தம் கிராமத்தைப் பழையனூர் காவல் நிலையத்திலிருந்து திருப்பாச்சேத்தி காவல்நிலைய எல்லைக்குள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பகுதியை அடிக்கடி வன்முறைக்கு ஆளாகும் பகுதியாக அறிவித்து, நிரந்தர பாதுகாப்பு அளிக்கப்படும். மற்ற சமூகத்தினரையும் அழைத்து இணக்கமான சூழலை உருவாக்கும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாட்கோ மூலம் தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும்" என்றார்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் க.லதா, எஸ்பி., டி.ஜெயச்சந்திரன், ஆதிதிராவிட ஆணைய உறுப்பினர்கள்,  மதுரை மாவட்ட விழிப்புஉணர்வு கண்காணிப்புக்குழு உறுப்பினர் பா.பாண்டியராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!