``ஒருநபர் ஆணையத்தில் அச்சமின்றி உண்மையைத் தெரிவிக்க வேண்டும்” - சரத்குமார் வலியுறுத்தல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஒருநபர் ஆணையத்தில் அச்சமின்றி உண்மைகளைத் தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். 

சரத்குமார்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து சரத்குமார் ஆறுதல் கூறிவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்று கடந்த 22 -ம் தேதி பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களைப் பார்த்து சமூகவிரோதிகள் ஊடுருவியுள்ளனர் என ரஜினி ஆவேசமாகப் பேசி உள்ளது வருத்தம் அளிக்கிறது. 

சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர் என அவர் சொல்வது உண்மை என்றால், அவர் சொல்லும் சமூக விரோதிகளின் பட்டியலை வெளியிட வேண்டும். குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சமூக விரோதிகளா? 

மக்களின் போராட்டத்தை அவர் கொச்சைப்படுத்தியுள்ளார். அவர்மீது சட்ட நடவடிக்கை பாய வேண்டும். மக்களின் போராட்டத்தை அவர் மட்டுமல்ல.., தமிழக அரசும் தவறாக சித்திரிக்க வேண்டாம். கடந்த 99 நாள்கள் போராட்டம் நடத்திய நிலையில் மக்களுடன் முதல்வர் பேசி இருக்கலாம். போராட்டம் என்பது மக்களின் உரிமை. காவல் துறை சற்று பொறுமை காத்து இருக்க வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் அரசு அணுகியிருக்கலாம். 

சரத்குமார்

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆணையம் நியாயமாக இருக்க வேண்டும். அந்த ஆணையத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் உண்மையைத் தெரியப்படுத்த வாய்ப்பு அளிக்க வேண்டும். தங்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்படுமோ? என்ற அச்சம் மக்களிடத்தில் உள்ளது. எவ்வித அச்சமுமின்றி மக்கள் உண்மையைத் தெரியப்படுத்த வேண்டும். போராட்டம் தொடர்பாக இதுவரை பதிவு செய்த வழக்குகளை அரசு திரும்பப்பெற வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடிட, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!