லார்ட்ஸ் மைதானத்தில் உலக லெவனை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள் அணி!

இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டி20 போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி, உலக லெவன் அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

ஐசிசி

கரீபியன் தீவுகளைக் கடந்த ஆண்டு இர்மா மற்றும் மரியா புயல்கள் தாக்கின. அதனால், கரீபியன் தீவுப்பகுதியில் உள்ள பல்வேறு நாடுகளிலும் கடும் சேதம் ஏற்பட்டது. மேற்கிந்தியத் தீவுகளின் புகழ்பெற்ற ஆண்டிகுவா, டொமினிகா உள்ளிட்ட 5 கிரிக்கெட் மைதானங்கள் புயலால் பெருத்த சேதமடைந்தன. இந்த மைதானங்களைச் சீரமைக்க பல்வேறு வகைகளில் நிதி திரட்டப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகள்  மற்றும் உலக லெவன் அணிகள் மோதும் டி 20 போட்டி இன்று நடந்தது. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற உலக லெவன் அணியின் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி , முதலில் பந்துவீச முடிவுசெய்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சார்பில் கெயில் மற்றும் லீவிஸ் களமிறங்கினர். துவக்கம் முதலே லீவிஸ் அதிரடியாக விளையாடினார். அவர், 26 பந்தில் 58 ரன்களைக் குவித்து ரஷித்கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பொறுமையாக விளையாடிய கெயில், 28 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சாமுவேல்ஸ்(43), ராம்தின்(44) மற்றும் ரஸல் ஆகியோர் அதிரடி காட்ட, மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. உலக லெவன் அணி தரப்பில் ரஷித் கான் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். 

மேற்கிந்திய தீவுகள்

பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது உலக லெவன் அணி. ஆனால், அந்த அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி. இரண்டாவது ஓவரில் தமீம் இக்பால் ஆட்டமிழக்க, 3 -வது ஓவரில் ரோஞ்சி மற்றும் தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். உள்ளூர் வீரரான பில்லிங்ஸும் அடுத்த ஓவரில் நடையைக்கட்ட, உலக லெவன் அணி 8 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அந்த அணிக்கு இலங்கை வீரர் திசேரா பெரேரா மட்டும் சிறப்பாக விளையாடினார். அவர், அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். மாலிக் (11), அஃப்ரிடி(11) ரஷித் கான்(9) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இறுதியில் உலக லெவன் அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், மேற்கிந்தியத் தீவுகள் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் அணி தரப்பில் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் சாய்த்தார். லீவிஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!