வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (01/06/2018)

கடைசி தொடர்பு:11:14 (01/06/2018)

கர்நாடகாவில் காலா? - ரஜினி ரசிகர்கள் கர்நாடக முதல்வரிடம் மனு!

ரஜினி நடித்த காலா படம் கர்நாடக மாநிலத்தில் தடையின்றி வெளியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கர்நாடக மாநில ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் முதல்வர் குமாரசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

காலா

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காலா. இந்தக் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் என்பதால், காலா படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் தயாராகியுள்ளது. ஜூன் 7- ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், காவிரி பிரச்னையில் தமிழகத்துக்காகக் குரல் கொடுத்தார் ரஜினி என்ற காரணத்துக்காக, அவரது `காலா' படம் கர்நாடகாவில் ரிலீஸ் செய்யத்தடை என வர்த்தக அமைப்புகள் அறிவித்துள்ளன. இதனால் காலா படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், ``காலா படம் வெளியிடுவது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியைக் கண்டிப்பாகச் சந்திப்போம்” எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கர்நாடக மாநில ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் மாநில முதல்வர் குமாரசாமியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் காலா படத்தை கர்நாடக மாநிலத்தில் தடையின்றி வெளியிடவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். படம் வெளியாக இன்னும் ஒருவாரம் இருப்பதால், காலா கர்நாடகாவில் வெளியாகும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் ரஜினி ரசிகர்கள்.