”மோடி விவசாயிகளுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்” -அய்யாக்கண்ணு கோரிக்கை!

திருவள்ளூர் மாவட்டத்தில் பேசிய  அய்யாக்கண்ணு, ”மோடி, விவசாயிகளுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்” என்றார். 

அய்யாக்கண்ணு

மரபணு மாற்றப்பட்ட விதைகள்மூலம் விவசாயம்  செய்வதைத் தடைசெய்ய வேண்டும் எனக் கோரி, கடந்த மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரியில் விழிப்புஉணர்வு பிரசாரப் பயணத்தைத் தொடங்கினார், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு.  திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நடந்த அந்தப் பிரசாரப் பயணத்தின்போது,  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லியைச் சந்தித்தார்.

அப்போது அவர், கொசஸ்தலை ஆற்றில் புண்ணியம் - குமாரமங்கலம் இடையே தடுப்பணை கட்ட வேண்டும், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு விவசாயிகளுக்குத் தரவேண்டிய பாக்கித் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். 

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு , “மோடி விவசாயிகளுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என நாங்கள் கேட்கிறோம். ஆனால் பா.ஜ.க-வினரோ, எங்களைக் கல்லால் அடிக்கிறார்கள். விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களுக்கு லாபகரமான விலையை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.  மோடியின்  கைப்பாவையாகவும் கையாலாகாத அரசாகவும் எடப்பாடி அரசு செயல்படுகிறதா என்ற  கேள்விக்குப்  பதிலளித்த  அய்யாக்கண்ணு, ”அய்யா, நாங்கள் யாரையும் குறைகூற விரும்பவில்லை. மோடி  சொல்வதைக் கேட்கிறது  இந்த அரசு. அதுபோல, நாங்கள் சொல்வதையும் இந்த எடப்பாடி அரசைக்  கொஞ்சம்   கேட்கச்சொல்கிறோம், அவ்வளவுதான்.  அரக்கோணத்தில்  தாக்குதல் நடத்திய பா.ஜ.க-வினர், நியாயத்தைக் கேட்டால் அடிக்கிறார்கள். அவர்மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்” என்றார். மேலும், தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் வரத்துக்கால்வாய்களைத் தூர் வாரி சீரமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!