வெளியிடப்பட்ட நேரம்: 08:56 (01/06/2018)

கடைசி தொடர்பு:11:31 (01/06/2018)

உதவுவது போல குழப்பம் ஏற்படுத்தும் போலி வெப்சைட்டுகள்... கலங்கும் அண்ணா பல்கலைக்கழகம்!

உதவுவது போல குழப்பம் ஏற்படுத்தும் போலி வெப்சைட்டுகள்... கலங்கும் அண்ணா பல்கலைக்கழகம்!

பொறியியல் படிப்பில் சேர, இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கு உதவுகிறோம் என்ற போர்வையில் உலாவரும் வாட்ஸ்அப் செய்திகளும், பொறியியல் கலந்தாய்வுக்கான இணையதளத்தைப் போன்றே ஏற்படுத்தப்பட்ட புதிய இணையதளங்களும், புதிய ஆப்ஸும் வலம்வருவதால், கலங்கி நிற்கிறது அண்ணா பல்கலைக்கழகம்.

அண்ணா பல்கலை

தமிழ்நாட்டில் இரண்டு லட்சம் பொறியியல் படிப்புகளுக்கான இடங்களுக்கு, 1.36 லட்சம் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் கலந்தாய்வுக்கு இன்னும் இரண்டு நாள்கள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் பல்வேறு வழிகளில் மாணவர்களைச் சேர்த்துவருகின்றன. 

கிராமப்புற மாணவர்கள் ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும்போது அவர்களுக்கு உதவும்வகையில் பொறியியல் கலந்தாய்வு மையங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைத்துள்ளது. இந்த உதவி மையங்கள் மூலம் விண்ணப்பித்தவர்கள் 12 ஆயிரம் பேர் மட்டுமே. வீட்டிலிருந்தும் இதர இடங்களிலிருந்தும் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 1,24,701 பேர். கிராமப்புற மாணவர்களுக்கு உதவ, அண்ணா பல்கலைக்கழகத்தால் ஆரம்பிக்கப்பட்ட உதவி மையத்தின் மூலம் மிகக்குறைந்த அளவே விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. 

ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கியதுமே, தனியார் சுயநிதி கல்லூரிகள் வாட்ஸ்அப் செய்தி மூலம் `எங்கள் கல்லூரியில் இலவசமாக விண்ணப்பிக்கலாம்' என்று செய்தியைப் பரப்பிவந்தன. இந்தச் செய்தியில் `கல்லூரிக்கு வர முடியாதவர்கள், கல்லூரிக்கு அருகில் உள்ள ஊர்களிலும் பல்வேறு மையங்களை அமைத்திருக்கிறோம். அங்கு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் கார்டு போன்றவற்றை எடுத்துவந்தால், நாங்களே இலவசமாகப் பதிவுசெய்து தருகிறோம்' என்று  இருந்தது. 

கவுன்சிலிங்

இதைத் தவிர, தனியார் கல்லூரிகளில் பணியாற்றிவரும் விரிவுரையாளர்கள், மாணவர்கள் மனம் மாற்ற களம் இறக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு விரிவுரையாளரும் பத்துக்கும்மேற்பட்ட மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர் கல்லூரி நிர்வாகிகள். விரிவுரையாளர்கள், அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளை அணுகி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மொபைல் எண் விவரங்களைப் பெற்று, மாணவர்களையும் பெற்றோர்களையும் அழைத்துப் பேசுகின்றனர். ``எங்கள் கல்லூரியில் கல்விக் கட்டணம் 25,000 ரூபாய் மட்டுமே. சேர விருப்பம் இருந்தால் 10,000 ரூபாய் இப்போது உங்களது வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்கிறோம்" என்று உறுதிமொழி கொடுத்து சான்றிதழ்களை வாங்கிவைக்கின்றனர். இதன்மூலம், ஆன்லைன் கலந்தாய்வுக்குப் பெருமளவில் மாணவர்கள் விண்ணப்பிக்காமல், நிர்வாக இடங்களில் சேர்த்துவருகிறார்கள். முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு படிப்புக் கட்டணம் வழங்கப்படுகிறது. இதை குறிவைத்தும் மாணவர்கள் வளைக்கப்படுகிறார்கள். 

தனியார் கல்லூரியில் சென்று விண்ணப்பிக்கும் மாணவர்களின் மொபைல் எண்ணும், கடவுச்சொல்லும் தெரிந்தால், ஆன்லைன் கலந்தாய்விலும் தனியார் கல்லூரிகள் குளறுபடி செய்வதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆன்லைன் கவுன்சலிங் மூலம் மாணவருக்குப் பதிலாக வேறு நபர்களே மாணவரின் தேர்வாகக் கல்லூரியைத் தேர்வுசெய்ய முடியும். ஆன்லைன் கலந்தாய்வில் பல்வேறு கல்லூரியை மாணவர்கள் தேர்வுசெய்ய வாய்ப்பு இருந்தாலும், முதல் கல்லூரியாக எந்தக் கல்லூரியைத் தேர்வுசெய்கிறோமோ அந்தக் கல்லூரி எளிதில் கிடைத்துவிடும். ``தனியார் கல்லூரிகளில் பதிவுசெய்திருந்தால், இதைத் தடுக்க ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருந்த பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளலாம்" என்கிறார் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான செயலாளர் ரைமண்ட் உத்தரிய ராஜு. 

அண்ணா பல்கலைதனியார் கல்லூரிகள் ஒரு பக்கம் இருக்க, கலந்தாய்வுக்கான (www.tnea.ac.in அல்லது www.annauniv.edu) இணையதளத்தின் பெயரைப்போலவே பல (www.tnea2018.in, http://tnea.net.in, www.tnea.in.net, www.annauniversity-counselling.com) இணையதளங்களையும், இன்ஜினீயரிங் அட்மிஷன் பெயரில் பல ஆப்ஸ்களையும் தொடங்கி ஆன்லைன் கவுன்சலிங் முறைக்குத் தலைவலி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 

இந்த இணையதளங்கள், அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தளங்கள் என்று படித்த பெற்றோர்களும் மாணவர்களும் பார்வையிட்டுவருகிறார்கள். இந்தத் தளங்களில் கவுன்சலிங் கட் ஆஃப் மதிப்பெண் உள்பட பல்வேறு தகவல்களையும் வழங்கி பெற்றோர்களுக்குத்  தவறான வழிகாட்டுதல் வழங்கிவருகின்றனர். இதனால் மாணவர்கள் தவறான தகவலைப் பெறுகின்றனர். இந்த இணையதளங்கள், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கும் வகையில் கண்ணுக்குத் தெரியாத வகையில் `எங்களுடைய தளத்துக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும், பொறியியல் கலந்தாய்வுக்கும் சம்பந்தமில்லை' என்று சிறிய எழுத்தில் பதிவுசெய்திருக்கின்றன. 

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான செயலாளர் ரைமண்ட் உத்தரிய ராஜு, ``www.tnea.ac.in அல்லது www.annauniv.edu இணையதளங்களை மட்டுமே பொறியியல் கலந்தாய்வுக்கானது. இதரத் தளங்களின் தவறான தகவலைப் பெறக் கூடாது. அண்ணா பல்கலைக்கழகம் எந்தவிதமான செயலியையும் தொடங்கவில்லை. மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்குப் பொறியியல் கலந்தாய்வு உதவி மையத்தின் 044-22359901 to 20 என்ற தொலைபேசி எண்களிலும், 044 – 2235 9901 to 20 (20 இணைப்புகள்) என்ற தொலைபேசி எண்களிலும், tnea2018@annauniv.edu என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்" என்றும் தெரிவித்துள்ளார். 

பொறியியல் படிக்க ஆர்வம் உள்ளவர்கள் ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள், ஜூன் 2-ம் தேதி.