வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (01/06/2018)

கடைசி தொடர்பு:09:00 (01/06/2018)

‘உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் காவிரி இன்னும் வரவில்லை’ - விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து, தமிழக விவசாயிகள் சங்கத்தினர் திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 காவிரி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அதைச் செயல்படுத்த மத்திய அரசு தொடர்ந்து காலம்தாழ்த்திவருகிறது. இதைக் கண்டித்தும், காவிரி விவகாரத்தில் கர்நாடகா தேர்தலை மனதில் வைத்துகொண்டு தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாகக் குற்றம்சாட்டியும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள், நேற்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

இதுகுறித்து  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் இந்திரஜித் பேசுகையில், ”வறண்ட காவிரியைப் பார்க்கும்போது, விவசாயிகள் தினமும் கண்ணீர் சிந்துகிறார்கள். காவிரி விவகாரத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட இதுவரை தண்ணீர் வரவில்லை. இதனால், பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் வீணாகக் கிடக்கின்றன. தமிழக விவசாயத்தையும் வாழ்வாதாரத்தையும் காக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தமிழகத்துக்கான தண்ணீரை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க