சிறையில் வேல்முருகன்... வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட நிர்வாகி | Tamizhaga Vazhavurimai party member commits suicide for Velmurgan arrest

வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (01/06/2018)

கடைசி தொடர்பு:10:46 (01/06/2018)

சிறையில் வேல்முருகன்... வேதனையில் உயிரை மாய்த்துக்கொண்ட நிர்வாகி

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை பெரியாண்டிகுழி கிராமம் தமிழக வாழ்வுரிமை கட்சி கிளை செயலாளர் ஜெகன்(35). இவர் கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளதால் மனவேதனையில் இருந்துள்ளார்

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் வேதனையடைந்த கட்சி நிர்வாகி, தீக்குளித்து தற்கொலைசெய்துகொண்ட சம்பவம் கட்சியினர் இடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்துக்கொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி

கடந்த 26-ம் தேதி, தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூற தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அங்கு சென்றார். 144 தடை உத்தரவு அமலில் இருந்த நிலையில், அவரை தூத்துக்குடி விமான நிலையத்தில் காவல்துறையினர் கைதுசெய்தனர். அவர் விடுவிக்கப்படுவார் என்றிருந்த நிலையில், உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேல்முருகன், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார். தண்ணீர்கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்ததால், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் வேல்முருகன் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்தார்.

 கடந்த ஏப்ரல் 10-ம் தேதி, நெய்வேலியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து வேல்முருகன் தலைமையில் என்எல்சி அனல்மின் நிலையம் முற்றுகைப் போராட்டம் நடந்தது. அப்போது, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தேச ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக வேல்முருகன் உட்பட 5 பேர்மீது நெய்வேலி தெர்மல் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனிடையே, ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், வேல்முருகனை தேசத் துரோக வழக்கில் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

இதனிடையே, வேல்முருகன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். உயிரை மாய்த்துக்கொண்ட ஜெகன் (35), தமிழக வாழ்வுரிமை கட்சியின் கிளைச் செயலாளராக இருந்தார். இவரது ஊர் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை பெரியாண்டிகுழி கிராமம். தனது கட்சித் தலைவர் வேல்முருகன் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ளதால், மனவேதனையில் இருந்துள்ளார். மேலும், தன் நண்பர்களிடம் இது குறித்து அவர் புலம்பியுள்ளார். இந்தநிலையில், நேற்று மாலை 6.30 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த ஜெகன், திடீரென
வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். அவரின் அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள், அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் 
சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக  கடலூரில்
உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இன்று காலையில் ஜெகன் உயிழந்தார்.

இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கட்சித் தலைவர் சிறையில் இருப்பதால், மன வேதனை அடைந்த கட்சி நிர்வாகி தீக்குளித்து உயிழந்துள்ள சம்பவம் கட்சியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 


[X] Close

[X] Close