உறவினர்களிடம் பேசிவருகிறோம்; 2 உடல்களும் இன்று ஒப்படைக்கப்படும்- தூத்துக்குடி கலெக்டர் பேட்டி | 2 bodies will handover to their relations with in today tuticorin collector said

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (01/06/2018)

கடைசி தொடர்பு:12:40 (01/06/2018)

உறவினர்களிடம் பேசிவருகிறோம்; 2 உடல்களும் இன்று ஒப்படைக்கப்படும்- தூத்துக்குடி கலெக்டர் பேட்டி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 7 பேரின் உடல்கள்  மறு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அவற்றில், 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள 2 பேரின் உடல்களும் இன்று மாலைக்குள் ஒப்படைக்கப்படும்  என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆய்வுசெய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி,
"சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி 3 சிறப்பு அரசு மருத்துவா்கள், ஒரு ஜிப்மா் மருத்துவமனை மருத்துவா் மற்றும் நீதிபதிகள் தலைமையில், நேற்று (31.05.18) காலை 11.35 முதல் இன்று (01.06.18) அதிகாலை 2 மணி வரை சிறப்பு அனுமதியுடன்  7 உடல்களும் மறு உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில், நேற்று மாலை சண்முகம், செல்வசேகர் மற்றும் கார்த்திக் ஆகியோரின் உடல்களும், இன்று காலை கந்தையா, காளியப்பன் ஆகியோரின் உடல்களும் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், உறவினர்களால் வாங்க மறுக்கப்பட்ட  ஸ்னோலின் மற்றும் தமிழரசன் ஆகிய  2 பேரின் உடல்களைப் பெற உறவினர்களிடம் சுமுகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறது. இன்று மாலைக்குள் 2 உடல்களும் உறவினர்களிடம்  ஒப்படைக்கப்படும்.

உயர் நீதிமன்றம் கூறிய விதிமுறைகளின்படி 7 பேரின்  மறு உடற்கூறாய்வு, முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்படைக்கப்பட்ட 5 பேரில், செல்வசேகர் மற்றும் காளியப்பன் ஆகிய 2 பேரின் குடும்பத்தினரிடம் அரசு அறிவித்த ரூ.20 லட்சத்துக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 பேரின் குடும்பத்துக்கும் வழங்கவேண்டிய காசோலைகள் தயாராக உள்ளன. இன்று வழங்கப்பட்டுவிடும். தூத்துக்குடியில் 100 சதவிகிதம் இயல்புநிலை திரும்பிவிட்டது.  பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல செயல்படுகின்றன" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க