சாராய ஆலை அதிபர் யார்? சட்டப்பேரவையில் தினகரன் - அமைச்சர் தங்கமணி காரசார மோதல்!

சட்டப்பேரவையில், அமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க அனுமதி அளிக்கப்படாததால் வெளிநடப்பு செய்ததாக டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். 

டி.டி.வி.தினகரன்

தமிழக சட்டப்பேரவையில் தொடர்ச்சியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, அமைச்சர் தங்கமணி, சாராய அமைச்சர் என்று பேசியிருந்தார். அதையடுத்து, பேரவையில் பேசிய அமைச்சர் தங்கமணி, சாராய ஆலை அதிபருக்கெல்லாம் அரசை விமர்சிக்கத் தகுதியில்லை என்று கூறியிருந்தார். அவர்களுக்கிடையே வார்த்தைப் போர் முற்றியநிலையில், இன்று சட்டப்பேரவை கூடியது.

டாஸ்மாக் கடைகளைக் குறைப்போம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, புதிதாக 810 கடைகளைத் திறந்திருப்பது ஏன்? என்று டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அமைச்சர் தங்கமணி, பேரவை உறுப்பினரின் உறவினர்கள் நடத்தும் சாராய ஆலையை மூடத் தயாரா என்று கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்விக்குப் பதிலளிக்க டி.டி.வி.தினகரன் அனுமதி கேட்டப்போது, அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதையடுத்து, அவர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்.

பேரவைக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், 'அமைச்சரின் விமர்சனத்துக்குப் பதிலளிக்க எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதனால், வெளிநடப்புச் செய்தேன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஆளும் கட்சியினர்தான் மக்களுக்கு பணப் பட்டுவாடா செய்தனர். தேர்தலில் தோற்ற ஆதங்கத்தில், நான் பணம் கொடுக்க முயன்றதாகக் குற்றம் சாட்டிவருகின்றனர். சட்டப்பேரவையில் பேச நேரம் அளிக்கப்படாவிட்டால், மக்கள்முன் பேசுவேன்' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!