வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (01/06/2018)

கடைசி தொடர்பு:14:20 (01/06/2018)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா?- பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? சுடுவதற்கு யார் உத்தரவிட்டது என்பதுகுறித்து தமிழக அரசு விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த கந்தகுமார் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவைத் தாக்கல்செய்திருந்தார். அதில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட வேண்டும் என்றால், அதற்கு முன்னதாக சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று விதிகள் உள்ளன. அதன்படி, முதலாவதாக அதிகப்படியான கூட்டத்தைக் கலைப்பதற்கு கண்ணீர்ப்புகைக் குண்டை பயன்படுத்தி, கூட்டத்தைக் கலைக்க வேண்டும். அதன்பின், வாட்டர்ஜக் எனப்படும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் உத்தியைப் பயன்படுத்தி கூட்டத்தைக் கலைக்க வேண்டும். அதன்பின், தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க வேண்டும். குறிப்பிட்ட வரைமுறைகளின்படி துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும்.  வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, அதன்பிறகே போராட்டகாரர்களின் முழங்காலுக்குக் கீழ் சுட வேண்டும். ஆனால், இந்த விதிமுறைகள் எதையுமே பின்பற்றாமல், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. எனவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு தொடர்பாக உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதிகள் 9 பேர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்க வேண்டும். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 50 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

அனைத்திந்திய வழக்கறிஞர் யூனியன் பொதுச் செயலர் முத்து அமுதநாதன் தாக்கல்செய்துள்ள மனுவில், "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவரும் நச்சுப் புகையினால், அப்பகுதி மக்கள் பலர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராட்டம் நடைபெற்றது. இதில், மே 22-ம் தேதி பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஊர்வலத்தில் போலீஸர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில், 50-க்கும் அதிகமானோர் தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தினால், தூத்துக்குடி பகுதியில் இணையதளச் சேவை, போக்குவரத்துச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. தூத்துக்குடி நகரமே தீவு போல காணப்படுகிறது. அப்பகுதி மக்கள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் முறையான அனுமதி பெறாமல் நடத்துள்ளது. எனவே, தமிழக தலைமைச் செயலர், உள்துறை செயலர், காவல்துறை டி.ஜி.பி, டி.ஐ.ஜி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி., சிப்காட் இன்ஸ்பெக்டர் ஆகியோர்மீது இந்திய தண்டனைச் சட்டம் 302-ன்படி கொலை வழக்கு பதிவுசெய்ய உத்தரவிட வேண்டும்'' என மனுவில் கூறியிருந்தார்.

இந்த இரண்டு மனுக்களும் இன்று நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, துப்பாக்கிச் சூட்டை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீஸ் நியமிக்கப்பட்டுள்ள அரசாணை, தமிழக அரசு தரப்பில் தாக்கல்செய்யப்பட்டது. இதை நீதிபதிகள் ஏற்க மறுப்பு தெரிவித்தனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா? சுடுவதற்கு யார் உத்தரவிட்டது என்பதுகுறித்து தமிழக அரசு விரிவான பதில்மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.