வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (01/06/2018)

கடைசி தொடர்பு:15:20 (01/06/2018)

காற்றில் பறக்கும் அமைச்சரின் உத்தரவு... தனியார் பள்ளிகளில் வசூல் வேட்டை!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்த அறிவிப்புகளால், பள்ளிக் கல்வித்துறை அதிரடி காட்டுவது ஒரு பக்கம் இருந்தாலும், அவற்றில் முக்கிய அறிவிப்புகள் பலவும் அறிவிப்பு வடிவிலேயே இருப்பதுதான் கவலை அளிக்கிறது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்த அறிவிப்புகளால், பள்ளிக் கல்வித்துறை அதிரடி காட்டுவது ஒரு பக்கம் இருந்தாலும், அவற்றில் முக்கிய அறிவிப்புகள் பலவும் அறிவிப்பு வடிவிலேயே இருப்பதுதான் கவலை அளிக்கிறது.

கட்டணம்

கட்டணத்தைச் சீரமைத்து, அவற்றை அறிவிப்புப் பலகையில் ஒட்ட வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். மேலும், அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதுடன், கட்டண விவரத்தையும் அறிவிப்புப் பலகையில் ஒட்டுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, கோவையில் உள்ள நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 5-ம் வகுப்புக்கு 14,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டுவருகிறது.

அதில், டியூஷன் ஃபீஸ் ரூ.11,115, ஸ்மார்ட் கிளாஸ், மற்றவை ரூ. 2,000, இ.சி.ஏ ரூ.985 எனக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டுள்ளன. கோவையில் உள்ள மற்றொரு தனியார் பள்ளியான நேஷனல் மாடல் பள்ளி, 3-ம் வகுப்புக்கு 50,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது.

இதுகுறித்து நேரு வித்யாலயா பள்ளி நிர்வாகத்தைத் தொடர்புகொண்டபோது, “நாங்கள் அதிகக் கட்டணம் வசூலிக்கவில்லை.  உள் கட்டமைப்புக்காகவும், எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸுக்காகவும்தான் வசூலிக்கிறோம்” என்றவர்களிடம், “கட்டண விவரத்தை ஒட்டுவதில்லை என்கிறார்களே? என்று கேட்டோம். அதற்கு, “அதான் நாங்கள் செலான் கொடுக்கிறோமே..?” என்றனர். ஆனால், “அமைச்சர் கட்டண விவரத்தைத்தானே ஒட்டச் சொல்லியிருக்கிறார்?” என்றதற்கு,”சரி, ஒட்டிடறோம்” என்று இணைப்பைத் துண்டித்தனர்.

இதுகுறித்து கோவை முதன்மைக் கல்வி அலுவலரிடம் கேட்டோம், ”கட்டண விவரங்கள் குறித்து எங்களுக்குத் தெரியாது. அதை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பிவிடுவார்கள். அவர்களும் ஆரம்பத்தில் ஒட்டுவதுபோல ஒட்டிவிட்டு எடுத்துவிடுகிறார்கள். அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள்குறித்து பெற்றோர் எங்களிடம் நேரடியாகப் புகார் அளிக்கலாம். நிச்சயமாக, அந்தப் பள்ளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனைத் தொடர்புகொண்டோம். ஆனால், அவர் பேசவில்லை. அறிவிப்புகளோடு நிற்காமல், அவற்றை அமல்படுத்தி, அவை செயல்படுவதைக் கண்காணிக்கவேண்டிய கடமை கல்வித்துறைக்கு இருக்கிறது.