மனைவி கண்முன்னே குழந்தையைக் கொடூரமாகக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை!

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் குழந்தையைத் தரையில் அடித்துக்கொன்ற தந்தைக்கு, ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது, பெரம்பலூர் நீதிமன்றம்.

                                      பெரம்பலூர் நீதிமன்றம்

பெரம்பலூர் மாவட்டம், கைகளத்தூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், பாலமுருகன். கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2013-ம் ஆண்டு நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அந்தோணிசாமியின் மகள் வெண்ணிலாவை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். சந்தோஷமாக குடும்பம் நடத்திவந்த இந்தத் தம்பதிக்கு, 2014-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து பாலமுருகனுக்கும், வெண்ணிலாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. மேலும், பாலமுருகன் தனது மனைவிமீது சந்தேகப்பட்டார்.

21-12-2014 அன்று இரவு, மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த வெண்ணிலா, பாலமுருகனிடம் கோபித்துக்கொண்டு பிறந்த 45 நாள்களே ஆன கைக்குழந்தையான பிரதீப்பை தூக்கிக்கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்குப் புறப்பட்டார். அப்போது, அவரை பாலமுருகன் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து, வழிமறித்துத் தகராறில் ஈடுபட்டதோடு, ஊருக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறியுள்ளார். அதற்கு வெண்ணிலா மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், வெண்ணிலாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்துள்ளார். இதையடுத்து, மனைவியின் இடுப்பில் இருந்த கைக்குழந்தை பிரதீப்பை பிடுங்கி, ஓங்கி தரையில் அடித்ததில், வாய் மற்றும் தலையிலிருந்து ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தான். இந்தச் சம்பவம் தொடர்பாக, கைகளத்தூர் போலீஸார் வழக்குப்பதிவுசெய்து பாலமுருகனை கைதுசெய்தனர். மேலும், இந்த வழக்கு விசாரணை பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்றம், குழந்தையை அடித்துக் கொலைசெய்த பாலமுருகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், கூடுதலாக 4 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!