கண்முன்னே கேட்பாரற்றுக் கிடந்த ரூ.25 லட்சம்! நெகிழவைத்த ஹோட்டல் ஊழியர்

சென்னையில் பிரபல தனியார் ஹோட்டலில் கேட்பாரற்றுக் கிடந்த சுமார் 25 லட்சம் ரூபாயை அங்கு பணி செய்யும் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்து நெகிழவைத்துள்ளனர்.

ஹோட்டல்

சென்னை, அண்ணாநகரில் உள்ள ஒரு பிரபல தனியார் ஹோட்டலுக்கு நேற்று காலை இரண்டு வாடிக்கையாளர்கள் சாப்பிட வந்துள்ளனர். அவர்களுக்கு ரவி என்ற இளைஞர்தான் உணவு பரிமாறியுள்ளார். வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டுச் சென்றதும் அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் ஒரு பை இருந்ததை ஊழியர் ரவி பார்த்துள்ளார். பையைத் திறந்து பார்த்த ரவி அதிர்ச்சியடைந்துள்ளார். அதில் 2000 ரூபாய் நோட்டுகள் அடங்கிய பணம் கட்டுக்கட்டாக இருந்துள்ளது. மொத்தம் 25 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. 

உடனடியாக ரவி இதைத் தன் மேலதிகாரியிடம் கூறியுள்ளார். பிறகு அந்தப் பணப்பை குறித்து அண்ணாநகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சம்பவத்தை அறிந்த காவல் அதிகாரிகள், ‘பணத்தைத் தேடி யாராவது வர வாய்ப்பிருக்கிறது. எனவே, இன்று ஒருநாள் நீங்களே வைத்திருங்கள். அப்படி யாரும் வரவில்லையென்றால் நாளைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிடுங்கள்’ எனக் கூறியுள்ளனர்.

அதேபோன்று நேற்று முழுவதும் பணத்தைத் தேடி யாரும் வராத நிலையில், இன்று அந்த ஹோட்டல் அதிகாரிகள் பணத்தைக் கொண்டு வந்து அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பணத்துக்காக எதுவும் செய்யும் சமூகத்தில், தனக்கு கையில் கிடைத்த பணத்தைத் காவல் நிலையத்தில் ஒப்படைக்க உதவியுள்ள ஏழை ஊழியர் ரவிக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!