துப்பாக்கிச் சூட்டுக்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் - விவசாயிகள் சங்கம்

"தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு மாநில அரசும், ஆலை நிர்வாகமும்தான் காரணம். இதற்குப் பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்" என அகில இந்திய விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் ஹன்னாமுல்லா வலியுறுத்தியுள்ளார்.

விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் ஹன்னாமுல்லா


தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்த பிறகு, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் 25 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள்தான் அதிகம். சுடப்பட்டவர்களில் காலுக்கு மேல் நெற்றி, வாய், கழுத்து, இடுப்பு, மார்பு ஆகிய பகுதிகளில்தான் சுடப்பட்டதாக இறந்தவர்கள் குடும்பத்தினர் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டில் வரம்பு மீறப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான முந்தைய கலெக்டர், எஸ்.பி மற்றும் போலீஸார்மீது, ஐபிசி 302வது பிரிவின்கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். மக்கள் போராட்டத்தைக் கண்டுகொள்ளாத அரசும் எதற்கும் அஞ்சாத ஆலை நிர்வாகமும்தான் காரணம். முதல்வர் பழனிசாமி இதற்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். 

துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்று 10 நாள்கள் ஆன நிலையிலும் தெருக்களில் வீடுகளில் புகுந்து உள்நோக்கத்துடன் கைது செய்யும் போலீஸாரின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரையில் அமைதி திரும்பாது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். 

போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களைச் சமூக விரோதிகள் என ரஜினி கூறியிருப்பது தவறானது, கண்டிக்கத்தக்கது. வேதாந்தாவின் குரல்தான் ரஜினியின் குரலாக வெளி வந்துள்ளது. நீதிமன்றம் பதப்படுத்தி வைக்கக் கூறிய 6 உடல்கள் பதப்படுத்தவில்லை என உறவினர்கள் எங்களிடம் குற்றம்சாட்டியுள்ளனர். இது நீதிமன்ற உத்தரவையே அவமதிக்கும் செயல். பல மாதங்கள், ஆண்டுக்கணக்கில் வரையில் உடல்களைப் பதப்படுத்தி வைக்கும் நவீனமயமாக்கப்பட்ட இன்றைய நிலையிலும் பதப்படுத்துவதில் அலட்சியம் காட்டுவது சட்டவிரோதமானது.

தூத்துக்குடியைப் பொறுத்தவரையில் ஸ்ரீ வைகுண்டம் தாமிரபரணியிலிருந்து குடிநீர், பாசனம், ஆலைகளுக்கு என்ற படிநிலையில்தான் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், குடிநீர், பாசனத் தேவையைக் கருத்தில் கொள்ளாமல் ஸ்டெர்லைட் போன்ற ஆலைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் 1.35 லட்சம் கோடி லிட்டர் தண்ணீரின் அளவைக் குறைக்க வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!