`ராஜராஜ சோழன் சிலைக்கு சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூஜை!' - பொதுமக்கள் தரிசிக்க ஏற்பாடு

சிலைகளுக்கு வெடிவெடித்து வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கும்பமரியாதை கொடுத்து வரவேற்று சிலைகளை நடராஜர் கோயிலின் கருவரையில் நடராஜர் சிலைக்கு எதிரே நிற்க வைத்து பூஜைகள் செய்தனர்.

குஜராத் அருங்காட்சியகத்திலிருந்து மீட்கப்பட்ட பேரரசர் ராஜராஜ சோழன் சிலைக்கு சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. 

ராஜராஜ சோழன் சிலை

தஞ்சை பெரிய கோயிலில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் ராஜராஜன் சிலை, அவரது பட்டத்து இளவரசி லோகமாதேவி ஆகிய சிலைகள் 
கொள்ளையடிக்கப்பட்டன. தற்போது இதன் மதிப்பு ரூ.150 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது. கொள்ளை தொடர்பாகக் கடந்த 3 மாதத்துக்கு முன்பு, இந்து அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் சாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல், உதவிக் கண்காணிப்பாளர்கள் ராஜாராம், அசோக் நடராஜன் உள்ளிட்ட சிலை தடுப்புப் போலீஸார் தீவிர விசாரனையில் ஈடுபட்டனர். பின்னர், சிலைகள் குஜராத் தனியார் அருங்காட்சியகத்தில் உள்ளதை உறுதிப்படுத்திய போலீஸார் சிலைகளைக் கைப்பற்றி சென்னைக்கு நேற்று (31.05.2018) எடுத்து வந்தனர்.

சென்னையிலிருந்து தஞ்சை செல்லும் வழியில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சிலைகளை எடுத்து வந்தனர். சிலைகள் வருவதை அறிந்த இந்து அமைப்பின் மாவட்டச் செயலாளர் குருவாயூரப்பன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜெயதீசன், வர்த்தக சங்க செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட சிதம்பரம் நகர பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோயிலில் குவிந்தனர். பின்னர், சிலைகளுக்கு வெடிவெடித்து வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கும்ப மரியாதை கொடுத்து வரவேற்று சிலைகளை நடராஜர் கோயிலின் கருவறையில் நடராஜர் சிலைக்கு எதிரே நிற்க வைத்து பூஜைகள் செய்தனர். பின்னர், கோயிலின் தேவசபையில் சிறிது நேரம் பொதுமக்கள் பார்வைக்கு வைத்தனர். இதைத் தொடர்ந்து சிலையைக் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு உதவி கண்காணிப்பாளர்கள் ராஜாராம், அசோக் நடராஜன் ஆகியோர் செய்தியாளார்களிடம் பேசுகையில், ``ராஜராஜ சோழன் வாழ்ந்த காலத்தில் 66க்கும் மேற்பட்ட பஞ்சலோக சிலைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் ராஜராஜ சோழன் சிலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அவை, பல ஆயிரம் கோடிகள் மதிப்புடையது. தற்போது 2 
சிலைகளைக் கைப்பற்றியுள்ளோம். மீதமுள்ள சிலைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கும் 
ராஜராஜனுக்கும் நிறைய தொடர்பு உள்ளது. அதனால் இந்த வழியாகச் செல்லும் போது நடராஜரை தரிசிக்க, கோயிலுக்கு சிலைகளை 
எடுத்து வந்தோம். சிலைகளை நீதிமன்றத்தில் சமர்பித்த பின்னர், ஆணை பெற்று தஞ்சை பெரிய கோயிலில் வைக்க அனைத்து 
ஏற்பாடுகளும் செய்யப்படும்’’ என்றார்கள்.

இதுகுறித்து இந்து அறநிலைத்துறை முன்னாள் அமைச்சர் சாமிநாதன் கூறுகையில், ``பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 
மாணிக்கவாசகர் பாட நடராஜர் கைப்பட எழுதிய ஓலைச்சுவடி சிதம்பரம் நடராஜர் கோயிலின் கருவறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு 
வந்தது. இது கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் பாண்டிச்சேரி 
அம்பலத்தாடி மடத்தெருவில் உள்ள அருங்காட்சியகத்தில் வெள்ளி பேழையில் பாதுகாத்து வைத்துள்ளனர். இதனைக் கைப்பற்றி 
சிதம்பரம் கோயிலில் வைக்க வேண்டும்.  மேலும் பல கோடிகள் மதிப்புடைய நடராஜர், மாணிக்கவாசகர் பஞ்லோக சிலைகள் 
கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி சிலைகளை மீட்டு கோயிலுக்கு எடுத்து வர வேண்டும்’’ என்று  
கூறினார்.

  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!