``எப்ப எடுத்தா என்ன? சொன்ன நேரத்தில போயிடுவோம்" - ஆம்னி பேருந்து டிரைவரால் பறிபோன 3 உயிர்கள்

ஆம்னி பேருந்து விபத்து

ஆம்னி பேருந்துகளின் அவசரத்தால் இன்று பெரம்பலூரில் பரிதாபமாக 3 பேர் பலியாகியுள்ளனர். 22க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு ஆம்னி பேருந்து ஒன்று நேற்றிரவு சென்றுகொண்டிருந்தது. இன்று அதிகாலை 4.30 மணியாளவில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளைக் கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக சாலையின் ஓரத்தின் இருந்த கட்டையில் மோதி ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணித்த தூத்துக்குடியைச் சேர்ந்த சிவா மற்றும் முகேஷ்ராஜ் என்ற மூன்று வயது சிறுவனும் ஜெகதாம்பிகை என்ற பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் துரிதமாக ஈடுபட்டு காயமடைந்தவர்களை தனியார் மற்றும் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்னி பேருந்து விபத்து

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிலரிடம் பேசினோம். ``நாங்கள் ஊருக்குச் செல்வதற்காக இணையதளத்தில் பதிவு செய்திருந்தோம். இரவு 10 மணிக்கு எடுக்க வேண்டிய ஆம்னி பேருந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு இரவு 11.15 மணியளவில்தான் சென்னையிலிருந்து புறப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பேருந்தை தாமதமாக எடுக்கிறீர்களே எனக் கேட்டு பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். ஆனால் அதற்கு அவர்கள், ``எப்ப எடுத்தா என்ன? சொன்ன நேரத்தில போயிடுவோம்" என்று மிரட்டும் தொணியில் சொன்னார்கள். வேகமாகச் சென்றதால்தான் விபத்து நடந்தது. இவர்களின் பணத்தாசையாலும் அலட்சியத்தாலும் மூன்று உயிர்கள் பறிபோயிருக்கிறது. இதற்கு ஆம்னி பேருந்து நிர்வாகம் ஈடுசெய்யுமா?. இவர்கள் சரியான நேரத்தில் பேருந்தை எடுத்திருந்தால் விபத்து நடத்திருக்காது" என வேதனையுடன் கூறினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!