வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (01/06/2018)

கடைசி தொடர்பு:18:40 (01/06/2018)

அன்று பாழடைந்த கட்டடம்... இன்று ஜொலிக்கும் அரசுப் பள்ளிக் கட்டடம்... ஆச்சர்யப்படவைத்த கிராமம்

அரசுப் பள்ளி

திருப்பூர் அருகே கோடை விடுமுறை முடிந்து இன்று மீண்டும் திறந்த அரசுப் பள்ளிக்கு ஊர்ப் பொதுமக்கள் வண்ணம் அடித்துக் கொடுத்து ஆச்சர்யப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து அனைத்து அரசுப் பள்ளிகளும் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மாணவ - மாணவிகள் அனைவரும் கடந்த ஒன்றரை மாதங்களகத் தாங்கள் பிரிந்திருந்த பள்ளியையும் உடன் படித்த நண்பர்களையும் மீண்டும் பார்க்கப்போகும் ஆர்வத்தில் உற்சாகமாகப் பள்ளிகளுக்குத் திரும்பியுள்ளனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் இன்று திறக்கப்பட்ட ஒரு பள்ளிக்கு வந்திருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் காலை முதலே அளவு கடந்த ஆச்சர்யத்தில் ஆழ்ந்துபோயிருக்கிறார்கள்.

திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் பகுதிக்கு உட்பட்ட கங்கா நகர் என்ற இடத்தில் செயல்பட்டு வருகிறது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தப் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மொத்தம் 131 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். இந்தப் பள்ளியைக் கட்டிமுடித்த காலம்தொட்டே எந்தவிதமான தூய்மைப் பணிகளும் செய்யாமல்போனதால், தற்போது கோடை விடுமுறையில் ஊர் மக்களே ஒன்றுசேர்ந்து அந்தப் பள்ளிக்கு வண்ணம் அடித்து புத்தம் புதிதாக மாற்றியிருக்கிறார்கள். ஊர்மக்களின் நற்காரியத்தால் மீண்டும் புதுப்பொலிவு அடைந்த இந்தப் பள்ளியை, இன்று வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் சேர்ந்து குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

அரசுப் பள்ளி

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய ஊர்மக்கள், "இத்தனை ஆண்டுகளாக எங்கள் ஊரில் செயல்பட்டு வரும் இந்தப் பள்ளிக்கூடம் பார்ப்பதற்கே பாழடைந்த கட்டடம்போலத்தான் காட்சியளித்து வந்தது. இதனால் இங்கு பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் பலரும் தயங்குகிறார்கள் என்பதை உணர்ந்தோம். எனவே, ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து இந்தப் பள்ளியைப் புதுப்பொலிவாக மாற்ற வேண்டும் எனத் தீர்மானித்தோம். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்துடன் பேசி அதற்காகத் திட்டங்களைத் தீட்டினோம். அதைத்தொடர்ந்து 'பள்ளி வளர்ச்சிக் குழு' என்ற ஓர் அணியை உருவாக்கி, அதன்மூலம் ஊர் பொதுமக்களிடம் நிதி திரட்டத் தொடங்கினோம். சுற்றுவட்டாரத்தில் அன்றாட வருமானத்தை நம்பி வாழும் பனியன் கூலித் தொழிலாளர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். ஆனாலும், யாரும் எங்களைப் புறக்கணிக்காமல், தங்களால் முடிந்த அளவுக்கு பண உதவி செய்ய முன்வந்தார்கள். 500, 1000 ரூபாய் என ஊர் மக்கள் அளித்த பங்களிப்பின் வாயிலாகச் சுமார் 1 லட்சம் ரூபாய் வரை நிதி திரட்டப்பட்டது. அதைக்கொண்டு இந்தக் கோடை விடுமுறை நாள்களில் பள்ளிக்கூடத்தைத் தூய்மைப்படுத்த தொடங்கினோம். வகுப்புகள் மற்றும் கழிவறைகளுக்கு பெயின்ட் அடித்தது, ஜன்னல் கதவுகளைச் சீரமைத்தது, புதிதாக 2,000 லிட்டரில் தண்ணீர் டேங்க் நிறுவியது எனப் பல்வேறு பணிகளையும் இந்த விடுமுறைக்குள் செய்து முடித்து பள்ளியை மீண்டும் புத்தம்புதிதாய் மாற்றியிருக்கிறோம். பள்ளியின் சுற்றுச்சூழல் அந்த மாணவர்களுக்கு புதியதோர் நம்பிக்கையை அளிக்கும் என நினைக்கிறோம்'' என்றார்கள் மகிழ்ச்சியுடன்.

அரசுப் பள்ளிகளை அரவணைக்கும் இதுபோன்ற மக்கள் இருக்கும்வரை, அரசே நினைத்தாலும் அரசுப் பள்ளிகளை மூட முடியாது.